2011-07-06 15:54:20

அபுதாபி அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு மாநாடு


ஜூலை06,2011. பயங்கரவாதத்துக்கு எதிரான மூன்று நாள் அனைத்துலக மாநாடு அபு தாபியில் வரும் அக்டோபர் 30ம் தொடங்கவுள்ளது.
பயங்கரவாதம் இன்று பல நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து உலக நாடுகள் பல உத்திகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று நாள் அனைத்துலக மாநாடு அபுதாபியில் இவ்வாண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, தாக்குதல் நடைபெற்றால் அதை எவ்வாறு வெற்றிகரமாக முறியடிப்பது உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளதாக மாநாடு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புவியியல் அமைப்பின்படி முக்கிய இடத்தில் அமைந்துள்ள துபை பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உன்னத பங்காற்றி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில், உலக நாடுகளிலிருந்து பாதுகாப்பு நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
இணையளதளங்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள், தனிநபர் பாதுகாப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பயங்கரவாதிகளின் தாக்குதலிருந்து காப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்கள், உத்திகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் மாநாடு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தரை, வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்கள், புலனாய்வுத் தகவல்கள் சேகரிப்பு மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.