2011-07-04 16:29:25

வாரம் ஓர் அலசல் – “உசுப்பேற்றப்பட்ட ஆசை உருக்குலைக்கும்”


ஜூலை04,2011. ஒரு நாள் அந்தக் காட்டில் நரிகள் எல்லாம் ஒன்று கூடின. காட்டு யானை ஒன்றை வைத்துச் சாப்பிட ஆசைப்பட்டன. ஆசையை நிறைவேற்றிக் கொள்ளக் காத்துக் கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே வந்தது ஒரு யானை. நரிகள் அதன் அருகில் சென்று, “காட்டரசர் யானையாரே” என்று வணங்கி நின்றன. அப்போது யானை, “சிங்கம்தானே காட்டரசன், நானா காட்டரசன்?” என்று கேட்டது. அதற்கு நரிகள், “யானையாரே யார் சொன்னது?, நேற்றுதான் நாங்கள் எல்லாம் சேர்ந்து உங்களை அரசனாகத் தேர்ந்தெடுத்தோம். உங்கள் உடம்பு வாகுக்கு ஈடாகுமா அந்தச் சிங்கம்” என்றன. உடனே தனது உடம்புவாகை ஒருமுறைப் பார்த்துக் கொண்ட யானை, நரிகள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டது. ஆமாம், “நான்தான் பெரியவன், நான்தான் காட்டரசன்” என்று சொல்லிக் கொண்டு உற்சாகத்தின் உச்சத்துக்கே போய்ப் பிளிறியது. இந்தச் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சிங்கங்கள் ஓடிவந்தன. யானையை அடித்துப் போட்டு பசியாறி இளைப்பாறின. காத்திருந்த காட்டு நரிகள் சிங்கங்கள் வைத்த மிச்சம் மீதிகளை வயிறாரச் சாப்பிட்டு முடித்தன. “ஆசைப்பட வைத்தோம், ஆசைப்பட்டதைச் சாப்பிட்டோம்” என்று பேசிக் கொண்டே புளிச்ச ஏப்பம் விட்டன நரிகள். அன்பு நேயர்களே, இந்தக் கதைக்கு ஒரு புத்தக ஆசிரியர் கருத்துச் சொல்கிறார்.....
“உசுப்பேற்றப்பட்ட ஆசை உருக்குலைக்கும்”. கடந்த வாரச் சில உலகச் செய்திகளை, வாசிக்கும் போது நமக்கும் இந்தக் காட்டு யானை, நரிகள் கதைதான் நினைவுக்கு வந்தது. பணத்தின்மீது, பதவியின்மீது, அதிகாரத்தின்மீது கொண்ட அளவற்ற ஆசையால், இவற்றின்மீது உசுப்பேற்றப்பட்ட ஆசையால் பல தலைவர்கள் மக்களின் வன்முறைப் புரட்சிகளை எதிர் நோக்கி வருகிறார்கள். சிலர் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நாடுகளில் ஊழல்கள் எகிறிவிட்டன. உலகின் மிகப்பெரிய கம்யூனிச நாடான சீனாவில்கூட ஊழல் மலிந்து விட்டதாகச் செய்தியில் வாசித்தோம். சீனக் கம்யூனிசக் கட்சியின் 90ம் ஆண்டின் அதிகாரப்பூர்வக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய சீன அரசுத்தலைவர் Hu Jintao, “அக்கட்சி, ஊழல் என்ற துன்பத்தில் வளர்ந்து வருவதாகவும், கட்சியில் அதிகரித்து வரும் ஊழல், அக்கட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யும்” எனவும் எச்சரித்தார். 1921, ஜூலை ஒன்றாந்தேதி சீனாவில் கம்யூனிசக் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதைக் கொண்டாடிய விழாவில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இவ்வாறு சீனத் தலைவர் கூறினார்.
இதே ஜூலை ஒன்றாந்தேதி, 1997ம் ஆண்டில் ஹாங்காக்கில் சீன ஆட்சி மீண்டும் தொடங்கியது. இந்த நினைவு நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹாங்காக்கில் சுமார் 2 இலட்சத்து 18 ஆயிரம் பேர் சனநாயக உரிமைகள் கேட்டும் அரசியலில் மாற்றங்களை வலியுறுத்தியும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் கண்டனப் பேரணிகளில் ஈடுபட்டனர்.
கொசோவோக் குடியரசில் அரசின் ஊழலை எதிர்த்து கடந்த புதன்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் பிரிஸ்தினாவில் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர். கொசோவோ பிரதமர் Hashim Thaci “ஒரு திருடர்” என்று சொல்லி அவரது அரசு பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை எழுப்பினர்.
2010ம் ஆண்டு இறுதியில் வெளியான ஓர் அறிக்கையில் இத்தாலியில் இடம் பெறும் ஊழல்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. இத்தாலியில் வரி கட்டுவோரில் மூன்றில் ஒருவர் அதிலிருந்து தப்பித்து விடுகின்றனர் என்று அவ்வறிக்கை குறிப்பிட்டிருந்தது. இந்நாட்டில் இடம் பெறும் ஊழல்களுக்குப் பத்து காரணங்களையும் முன்வைத்திருந்தது. இந்தியாவில் இப்போது இடம் பெற்று வரும் ஊழல் பிரச்சனை நாம் அனைவரும் தெரிந்ததே. இந்தியாவில் அதிகரித்து வரும் இலஞ்ச ஊழல் ஒழிக்கப்படும் நோக்கில் அன்னா ஹசாரே லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடி வருகிறார். லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நீதிபதிகளைச் சேர்க்க வேண்டும் என்ற மக்கள் குழுவின் கோரிக்கையையும் காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கிறார் ஹசாரே. இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படாவிடில் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கவிருப்பதாகவும் எச்சரித்துள்ளார் ஹசாரே. இந்தியாவில் இடம் பெறும் ஊழல்களால் பல கோடிக்கணக்கான டாலர் இழப்பு என்றும் இது நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்றும் அண்மை புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளியான ஒரு தகவலின்படி, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடந்த ஊழல்களின் மதிப்பு 80 இலட்சம் கோடி ரூபாய்! அதாவது இந்தியாவின் மொத்த வருவாய் எனப்படும் ஜிடிபியில் பாதி. 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது. இவ்வளவுக்கும் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. உண்மை நிலவரம் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். இந்த 12 ஆண்டுகளில் இவை தவிர மேலும் சில ஊழல்களும் நடந்துள்ளன. இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் 1000 கோடி ரூபாய், அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி 500 கோடி ரூபாய், ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி 130 கோடி ரூபாய், சஞ்சய் அகர்வாலின் மோசடி 600 கோடி ரூபாய் … இப்படி பட்டியல் நீள்கிறது. எனினும், வருகிற ஆகஸ்டில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கு முன்னர் ஊழலைத் தடுக்கும் மசோதா தயாராக இருக்கும் என்று இஞ்ஞாயிறன்று நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பது ஓர் ஆறுதலான செய்தி.
உலகம் முழுவதிலும் இடம்பெறும் இலஞ்சம் வாங்கல், சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை மிகவும் வறுமை நாடுகளில் வாழும் அடிமட்ட மக்களையே கூடுதலாகப் பாதிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்களின் தாக்கத்தால் வளரும் நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் 5 கோடி முதல் 10 கோடி டாலரை இழப்பதாக உலக வங்கி அண்மையில் கணக்கிட்டுள்ளது.
கல்வித்துறையில் இலஞ்சம்... நீதித்துறையில் இலஞ்சம், காவல்துறையில் இலஞ்சம், அரசியலில் இலஞ்சம், அலுவலகங்களில் இலஞ்சம்.... இப்படி பாரபட்சம் இல்லாமல் ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் இலஞ்சம். இன்று பல நாடுகளின் போக்கைப் பார்க்கும் போது அதிக இலஞ்சம் கொடுப்பவர்கள் தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்வதாகத் தெரிகிறது. ஊழலை ஒழிப்போம், இலஞ்சத்தை வேரறுப்போம் என்று சொல்லிக் கொண்டே இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் கசப்போடு பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்துகூட விடுதலை கிடைத்து விடுகிறது. இன்று நாடுகளில் ஊழல் ஒழிப்போம் என்று சொல்லுவதேகூட ஒரு நாகரிகமாகப் போய்விட்டது. நாடுகளைத் தொற்றியிருக்கும் இதனை ஒரு புற்று நோய் என்றுகூடச் சொல்லலாம். அண்மையில் ஓர் இந்திய அமைச்சர் பேசுகையில், “ஊழல் புரிபவர்கள் நாட்டின் எதிரிகள். நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகளாக இருப்பவர்கள், ஏழைகளின் எதிரிகள். நாட்டின் மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டினர் ஊழல் புரிவதாகவும் மற்ற 95 விழுக்காட்டினர் அதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பதாகவும், இப்படி மௌனமாக இருப்பதன்மூலம் அவர்கள் தங்கள் சனநாயகக் கடமையைச் செய்யாமல் இருக்கின்றார்கள்” என்று கூறியுள்ளார்.
அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரசு அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான, தனிப்பட்ட இலாபங்களுக்காக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரசு பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது என்று விக்கிப்பீடியாவில் விளக்கம் சொல்லப்படுகிறது.
அன்பு நேயர்களே, உசுப்பேற்றப்பட்ட ஆசை உருக்குலைக்கும்”. இந்த வரிகளை நம் சொந்த வாழ்க்கையில்கூட மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்போமே. ஆசையே இல்லாமல் வாழ முடியாது. ஆனால் இந்த ஆசையைப் பேராசையாக இல்லாமல், அதனை நமக்குள் கட்டுப்படுத்தி நாமே அதனை நிர்வாகம் செய்ய முடியும். ஆசையை நாம் நிர்வாகம் செய்ய வேண்டுமேயொழிய, ஆசை நம்மை நிர்வாகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆசையை நமக்குள் வைத்திருக்க வேண்டுமேயொழிய ஆசைக்குள் நாம் சென்றுவிடக் கூடாது. பட்டினத்தார் பாடினார் - ஓர் எருமை இருந்தாலே அவ்விடம் அசிங்கமாகி விடும். ஐந்து எருமைகள் ஓரிடத்தில் இருந்தால் என்னவாவது என்று. அதாவது மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களை அடக்காமல் வாழ்வது பற்றிப் பட்டினத்தார் இப்படிச் சொன்னார்.
ஆம். மனம்போன போக்கில் வாழ்கிற போதுதான் பிரச்சனைகள் தொற்றிக் கொள்ளும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது. ஆனால் எனக்கு இனிப்புதான் அதிகம் பிடிக்கும் என்று இனிப்புகளைச் சாப்பிட்டால் நோய் முற்றிப் போக வாய்ப்பு உள்ளது. எனவே எந்தவொரு விடயத்திலும் எது சரி, எது தவறு, எது நல்லது, எது தீயது, எது நன்மையானது, எது தீமையானது என்பதைப் பகுத்தாராய்ந்து வாழ்ந்தால் அளவோடு வாழ முடியும். பேராசைகளை உசுப்பேற்ற விடாமல் மன மகிழ்ச்சியான, மன நிம்மதியான வாழ்வும் அமையும்.








All the contents on this site are copyrighted ©.