2011-07-04 16:33:00

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூலை 04, 2011. இன்றைய உலகின் அநீதி, ஏழ்மை மற்றும் துன்பங்களுக்கான பதில்கள் இறையன்பில் காணக்கிடக்கின்றன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்ற இஞ்ஞாயிறு நற்்செய்தி வாசக வார்த்தைகளை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை, அன்று மக்கள் கூட்டத்தை நோக்கி கருணைப் பார்வையுடன் செயல்பட்ட இயேசு இன்றும் இவ்வுலகை நோக்கி அப்பார்வையைத் தொடர்கிறார், ஏனெனில் பல்வேறு துன்ப நிலைகளால் அழுத்தப்பட்டிருக்கும் மக்கள், தங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இழந்து நிற்கிறார்கள் என்றார்.
ஏழை நாடுகளில் பெருமெண்ணிக்கையில் வாழும் ஏழைகளையும், பணக்கார நாடுகளில் மனநிறைவின்றி வாழும் மக்களையும், பல நாடுகளில் துன்புறும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளையும் இம்மூவேளை செப உரையின்போது நினைவு கூர்ந்தார் திருத்தந்தை. இறைவன் அனைவருக்கும் இளைப்பாறுதல் வழங்குகிறார், ஆனால் அதற்கு முன் நிபந்தனையாக, 'என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதையும் எடுத்துரைக்கிறார் இயேசு என்ற திருத்தந்தை, இயேசுவின் நுகம் என்பது அன்பின் கட்டளை எனவும் எடுத்துரைத்தார். அதிகாரத்திற்கென வன்முறையைக் கைக்கொள்வதையும், எவ்விலை கொடுத்தும் வெற்றியைப் பெற முயல்வதையும் மனித குலம் கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கான மதிப்புடன் வன்முறையற்ற வழிகளைக் கைகொள்வதே நல்லதொரு வருங்காலத்திற்கு வழிவகுக்கும் என மேலும் கூறினார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.