2011-07-02 15:15:12

திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவு பட்டியல்


ஜூலை02,2011. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவில், செலவைவிட வரவு ஏறக்குறைய ஒரு கோடி யூரோக்கள் அதிகம் இருந்ததாக இச்சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருப்பீட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பீட நிர்வாகம் மற்றும் வரவு செலவுக்குப் பொறுப்பான கர்தினால்கள் அவை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் கடந்த மூன்று நாட்களாகக் கூட்டம் நடத்திய பின்னர் இவ்வறிக்கையை வெளியிட்டது.
2010ல் வரவு 245,195,561 யூரோக்கள் ஆகவும் செலவு 235,347,437 யூரோக்கள் ஆகவும் இருந்து 9,848,124 யூரோக்கள் மீதமாக அவ்வரவு செலவு பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போலவே, 2010ம் ஆண்டிலும் இலாபம் காட்டியுள்ள திருப்பீடம், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், அகிலத் திருச்சபையில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்கு உதவுதல் போன்றவைகளுக்கே முக்கியமாகச் செலவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது.
2010, டிசம்பர் 31ம் தேதியோடு திருப்பீடத்தில் பணியாற்றியோரின் எண்ணிக்கை 2806 ஆகவும் இது 2009ல் 2762 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
அதேசமயம், வத்திக்கான் நகர நிர்வாகத்தின் பணியாளர்கள் 2010, டிசம்பர் 31ம் தேதியோடு 1876 ஆகவும் ஆனால் அவ்வெண்ணிக்கை 2009ல் 1891 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
2010ல் வத்திக்கான் அருங்காட்சியத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது இந்த இலாபத்திற்கு ஒரு காரணம் எனவும், இந்தப் பார்வையாளர்களுக்கு இந்தக் கர்தினால்கள் அவை தனது நன்றியையும் தெரிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.