2011-07-02 15:23:15

இலங்கை 'போர்க்குற்றம்' - நவநீதம்பிள்ளை எச்சரிக்கை


ஜூலை02,2011. இலங்கை போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் தாமதம் செய்யக்கூடாது, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்த இலங்கை தவறினால் சர்வதேச நடவடிக்கைக்கு அது வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களைச் சுட்டுக்கொன்றது மற்றும் பிற தாக்குதல் சம்பவங்கள் குறித்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகள் மத்தியில் மிக அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து தெரிவித்த நவநீதம்பிள்ளை இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விசாரணை ஒரு காலவரம்பற்ற, முடிவில்லாத வழிமுறையாக இருக்கக்கூடாது என்று கூறிய நவநீதம் பிள்ளை, இலங்கை அரசு முன்பு நடத்திய ஒரு விசாரணையில், அதற்குத் தரப்பட்ட பணியை முடிக்க தவறிவிட்டது, எந்த ஓர் அறிக்கையையும் வெளியிடவில்லை, அந்த விசாரணையின் விளைவாக ஒருவர்கூட நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை என்றார்.
அதே போல் இப்போதும் நடந்தால், சர்வதேச சமூகம், மேல் நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது என்று கூறிய நவநீதம் பிள்ளை, ஐ.நா மனித உரிமை அவை இந்த விடயத்தை மேலும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.