2011-06-30 16:06:20

“லொசர்வாத்தோரே ரொமானோ” தினத்தாளின் 150 வருடச் சேவைக்குத் திருத்தந்தை பாராட்டு


ஜூன் 30,2011. “லொசர்வாத்தோரே ரொமானோ”(L'Osservatore Romano) என்ற திருப்பீடச் சார்பு தினத்தாள், கடந்த 150 ஆண்டுகளாக உண்மையைத் தலையாய நோக்கமாகக் கொண்டு திருத்தந்தையின் மறைப்பணியோடு என்றும் ஒன்றித்துச் செயல்பட்டு வருகின்றது என்று புகழாரம் சூட்டினார் திருத்தந்தை.
லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளின் 150ம் வருட நினைவை முன்னிட்டு அத்தினத்தாளின் இயக்குனருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, 1861ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி இத்தினத்தாளின் முதல் பிரதி வெளிவந்ததைக் குறிப்பிட்டு அதன் 150 வருடச் சேவையைப் பாராட்டியுள்ளார்.
திருத்தந்தையின் தினத்தாள் என்று வழக்கமாக இது அழைக்கப்படுகின்றது என்றும், உலகப் போர்களின் காலத்திலும் அதற்குப் பின்னானப் பனிப்போரின் போது கிறிஸ்தவருக்கு எதிரான அடக்குமுறைகளின் போதும் இத்தினத்தாள் திருத்தந்தையர் 15ம் பெனடிக்ட், 11ம் மற்றும் 12ம் பத்திநாதர் ஆகியோருக்குத் தைரியமுடன் ஆதரவு வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
2008ம் ஆண்டில் மலையாள மொழியில் வெளியானது உட்பட 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதியில் பல்வேறு மொழிகளில் இத்தினத்தாள் உலகெங்கும் விநியோகிக்கப்பட்டதையும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
தற்சமயம் இணையதளம் உட்பட நவீன தொழிட்நுட்பத்தில் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாள் கொண்டுள்ள வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி இதில் பணி செய்வோர் எல்லாருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.