2011-06-29 16:16:17

திருத்தந்தையின் மறையுரை


ஜூன் 29, 2011. இப்புதன், ஜூன் 29ம் தேதி, திருச்சபையில் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் விழா. இதே நாளில் தான் திருத்தந்தை, புதிய பேராயர்களுக்கு பாலியம் எனும் கழுத்துப்பட்டையை வழங்குவது பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. இந்த நாளுக்குரிய இந்த வழக்கமான இரு முக்கியத்துவங்களையும் தாண்டி, இப்புதனன்று இன்னொரு விழாவும் திருச்சபையில் சிறப்பிக்கப்பட்டது. ஆம். திருத்தந்தையின் குருத்துவத் திருநிலைப்பாட்டின் 60ம் ஆண்டு விழாதான் அது. அகில உலகத்திருச்சபையும் இந்நாளை மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கின்றது. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவையொட்டி உரோம் நேரம் புதன் காலை 9.30 மணிக்கு புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, கடந்த 12 மாதங்களில் பேராயராக உயர்த்தப்பட்டவர்களுக்கு அவர்களின் அதிகாரத்தைக் குறிக்கும் பாலியம் எனும் கழுத்துப்பட்டையை வழங்கினார். பேராயராக உயர்த்தப்பட்டுள்ள ஹைதராபாத் பேராயர் தும்மா பாலா உட்பட 40 பேர் திருத்தந்தையிடம் இருந்து பாலியத்தைப் பெற்றனர். இத்திருப்பலியில் பங்குபெற முடியாத ஏனைய 5 பேராயர்களுள் கட்டக்-புபனேஸ்வர் புதிய பேராயர் ஜான் பார்வாவும் ஒருவர். இவர்கள் ஐவரும் அவரவர்களின் சொந்த நாட்டில் திருப்பீடத்தூதர் வழி பாலியத்தைப் பெற்றுக்கொள்வர்.
இப்புதன் பெருவிழா திருப்பலியில், தன் அறுபதாவது குருத்துவத் திருநிலைப்பாட்டையும் நினைவு கூர்ந்த திருத்தந்தை, அதையொட்டிய கருத்துக்களை முன்வைத்து தன் மறையுரையை வழங்கினார்.
'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். நீங்கள் என் நண்பர்' எனத் தன் சீடர்களை நோக்கி கூறினார் இயேசு.
60 ஆண்டுகளுக்கு முன்னால் என் குருத்துவத் திருநிலைப்பாட்டின் போது கூறப்பட்ட இந்த வார்த்தைகளை நான் இன்றும் ஆழமாக செவிமடுக்கின்றேன். திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலில் நம்மை நெருக்கமாக அழைத்து இறைக்குடும்பத்தின் உறுப்பினர்களாக்கிய இயேசு, குருத்துவத் திருநிலைப்பாட்டில் 'நண்பர்' என என்னை அழைத்தார். அவ்வாறு என்னை அழைத்து அவரைப்போன்றே பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கினார்.
'பணியாளர் அல்ல, நண்பர்கள்' என அழைத்து திருப்பலி ஒப்புக்கொடுக்கும் வார்த்தைகளையும் குருத்துவத்தின் வழி என்னிடம் ஒப்படைத்தார் இயேசு. அவரின் வார்த்தைகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் பணியையும் வழங்கினார். 'பணியாளர் அல்ல, நண்பர்கள்' என அழைத்ததில் ஒரு குருவின் வாழ்வு நடவடிக்கைகள் அனைத்தும் அடங்கியுள்ளன.
நட்பு என்பது என்ன? ஒரே எண்ணமும் ஒரே விருப்பமும் கொள்வது. இயேசுவும் கூறுகிறார், 'நானும் என் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன' என்று. ஆயன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார். என்னையும் அவ்வாறே அவர் அறிந்து வைத்துள்ளார். என்னை அந்தரங்கமாய் அவருக்குத் தெரியும். ஆனால் நான் அவரை அந்த அளவு அறிந்து வந்திருக்கின்றேனா? விவிலியம், செபம், திருவருட்சாதனங்கள், புனிதர்களுடன் ஆன ஐக்கியம், அவர் என்னிடம் அனுப்பும் நபர்கள் ஆகியவைகள் மூலம் இறைவனை நான் மேலும் மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. நட்பு என்பது ஒருவரைத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, விருப்பங்களின் ஐக்கியம் அது. என் விருப்பம் இறைவிருப்பத்தோடு நெருங்கி வளரவேண்டும். அவர் விருப்பமே என்னுடையதாக வேண்டும். மேலும், இறைவன் தன் வாழ்வை நமக்காக வழங்குகின்றார் என்ற திருத்தந்தை, இறைவா என்னுடைய வாழ்வும் எனக்கானதாக இல்லாமல், உம்முடனான ஐக்கியத்தில் பிறருக்கான வாழ்வாக மாறட்டும் என வேண்டினார்.
நட்பு குறித்த இயேசுவின் வார்த்தைகளைத் திராட்சைக்கொடி குறித்த அவரின் உரையாடலின் பின்னணியில் நோக்குவோம் என மேலும் தொடர்ந்தார் திருத்தந்தை.
'நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்' என்றார் இயேசு. தான் என்பதிலிருந்து வெளியேறி மற்றவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்பதே அவரின் கட்டளையாக இருந்தது. உயிர்த்த இயேசு தன் சீடர்களை நோக்கி, 'எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்' என்கிறார். நமக்கென நாம் வகுத்திருக்கும் உலகின் எல்லைகளைத் தாண்டி மற்ற மக்களை நோக்கி போகச் சொல்கிறார் அவர். நம் சுயநலன்களைத் தாண்டி நாம் செல்லும்போதுதான் இறைவன் நம் உலகிற்குள் நுழைய முடியும்.
நம்மிடம் இறைவன் எதிர்பார்க்கும் கனி என்ன? இங்கு அவர் கூறும் உருவகம் திராட்சைக் கனி. திராட்சை நல்ல பலன் தர, சூரிய ஒளி தேவை. மழையும் கூட தேவை. திராட்சை நல்ல இரசமாக வேண்டுமானால், அது நசுக்கப்பட்டு பிழியப்படவேண்டும். அவை இரசமாக மாற, பொறுமையும் கண்காணிப்பும் தேவை. இதுவே வாழ்விற்கான உருவகமாகவும் உள்ளது, குறிப்பாக குருத்துவ வாழ்விற்கான உருவகம். நம் வாழ்க்கைப் பாதையின் அனைத்து நேரங்களிலும் இறை அன்பின் இருப்பு இருப்பதைக் காணலாம்.
பழைய ஏற்பாட்டில் திராட்சைப் பழத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் இரசமானது நீதியின் உருவகமாக உள்ளது. இறைவனின் சட்டங்களுக்கு இயைந்த வகையில் வாழும் வாழ்விலிருந்து எழும் நீதியே அது. இச்சட்டத்தின் உட்பொருள் என்பது இறைவனுக்கான மற்றும் அயலாருக்கான அன்பை உள்ளடக்கியது. இது கிறிஸ்துவுக்கும் அவர் திருச்சபைக்கும் விசுவாசமாக இருப்பதையும் எதிர்பார்க்கிறது. இது துன்பத்தையும் உள்ளடக்கி நிற்கின்றது. உண்மைக் கனிகளைப் பெற வேண்டுமானால், தன்னையே கையளித்தல் மற்றும் தன்னையே மறுத்தல் இடம் பெற வேண்டியிருப்பது, சிலுவை அடையாளத்தையும் தன்னுள் தாங்கி நிற்கின்றது.
கடந்த ஓராண்டில் பேராயர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான பாலியத்தை இன்று வழங்குகின்றேன். பாலியம் என்றால் என்ன?
இது நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் இயேசுவின் எளிய நுகத்தை நினைவுறுத்தி நிற்கின்றது. அவரின் நுகம் அவரின் நட்பை ஒத்தது. இந்த நுகம் இனிமையானது, அதே வேளை நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது. அதுவே நம்மை வடிவமைக்கிறது. இந்த நுகமே இயேசுவுடன் ஆன நட்பை நோக்கி பிறரை அழைத்து வருகிறது. ஆட்டின் உரோமத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்தப் பாலியம், நமக்காக வெள்ளாட்டுக்குட்டியாய் மாறிய ஆயனை நினைவூட்டி நிற்கின்றது. மனித குலம் எனும் ஆடு தவறி அலைந்ததை தேடி வந்த இயேசு கிறிஸ்துவை நமக்கு நினைவூட்டுகின்றது. நல்ல ஆயர்களாய் மக்களை தோளில் சுமந்து இயேசுவை நோக்கிக் கொண்டு வரும் ஆயரின் கடமைகளைச் சுட்டிக்காடி நிற்கின்றது இந்தப் பாலியம். புனித பேதுருவின் வழிவந்தவருடன் திருச்சபை ஆயர்களின் ஐக்கியத்தையும் இது காண்பித்து நிற்கின்றது.
இந்த 60 ஆண்டுகால என் குருத்துவப்பணி வாழ்வில், அனைத்துக் குருக்களுக்கும் ஆயர்களுக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் வார்த்தைகளைத் தெரிவிக்க ஆவல் கொள்கின்றேன். நன்றி அறிவித்தலின் இந்த நேரத்தில், இறைவனின் நட்புக்காக அவருக்கும், என் வாழ்வில் என்னை உருவாக்கி என்னுடன் நடைபயின்ற அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.