எல்லைகளையல்ல, மக்களைப் பாதுகாப்பதற்கு காரித்தாஸ் அழைப்பு
ஜூன்29,2011. அரபு நாடுகளின் அண்மைப் பதட்டநிலைகளால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்
குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்குச் சர்வதேச சமுதாயம் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்துலக
கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு கேட்டுள்ளது. நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதைவிட
மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் கொள்கைப்பிரிவு இயக்குனர் மார்ட்டினா லிபெஷ் வலியுறுத்தினார். வட
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டநிலைகளால் அண்மை மாதங்களில்
லிபியாவை விட்டு ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் பேரும் சிரியாவை விட்டு பத்தாயிரம் பேரும்
வெளியேறியுள்ளனர். இவ்விரு நாடுகளிலிருந்தும் பெருமளவான அகதிகள் வெளியேறி வருவது பெருமளவான
மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் மற்றும் அப்பகுதிகளை மேலும் உறுதியற்ற தன்மைக்கு
இட்டுச் செல்லும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. வன்முறை மற்றும்
பதட்டநிலைகளால் நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகளின் எதிர்கால வாழ்வைப் பாதுகாத்து அவர்களுக்குத்
தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், அப்பகுதிகளின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வு
காண்பதும் அவசியம் என்று லிபெஷ் கூறினார்.