2011-06-28 16:38:18

கம்போடியா இனப்படுகொலை வழக்கு விசாரணைகள் அந்நாட்டில் துவக்கம்


ஜூன் 28, 2011. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணை தலைநகர் நாம்பென்னில் ஆரம்பித்துள்ளது.
நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரானக் குற்றங்களுக்காக, தற்போது உயிரோடு இருக்கும் கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த நான்கு மூத்த உறுப்பினர்கள் மீது நீதி விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
உரிமை மீறல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாலாயிரம் பேரின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்படவுள்ளன.
கம்போடியாவில் 1970களின் இறுதியில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் உயிரிழந்ததற்கு, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் காரணமாக இருந்தன.
இந்தச் சிறப்பு தீர்ப்பாயம் பணியாற்றத் தொடங்கி ஆறு ஆண்டுகளாகி விட்ட நிலையில், வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைய இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது







All the contents on this site are copyrighted ©.