2011-06-27 15:43:42

வாரம் ஓர் அலசல் - “சுற்றுப்புறத்தைப் பாதுகாப்போம், இன்பமாய் வாழ்வோம்”


ஜூன் 27,2011: “நீல நிறமாக மாறிய கிணற்று நீர் : விவசாயி அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு செய்தியை இச்சனிக்கிழமை இ-தினத்தாளில் வாசித்தோம். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில், நில அதிர்வு ஏற்பட்ட சில தினங்களில், விவசாய கிணற்றின் தண்ணீர், சாம்பல் மற்றும் நீல நிறத்துக்கு மாறியுள்ளது. ஊற்று நீரும் அதே நிறத்தில் உள்ளது. இப்படிக் கிணற்று நீரும் குளத்து நீரும் நிறம் மாறும் செய்திகள் அவ்வப்போது வெளி வருகின்றன. சுற்றுச்சூழல் மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது என்ற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது.
கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், “இந்தியாவில் சுற்றுச்சூழலைக் கெடுப்பதில் இன்டர்நெட் போன்ற தகவல் தொகுப்பு மையங்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை பயன்படுத்தும் எரிசக்தியின் அளவு, இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையை விட அதிகம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “கூகுள், அகாமாய், யாகூ, ஆப்பிள் இங்க் போன்ற இன்டர்நெட் வசதிக்கான தகவல் தொகுப்பு மையங்கள் ஆண்டுக்கு 66,200 கோடி கிலோ வாட் மின்சக்தியைப் பயன்படுத்துகின்றன. அதன் மூலம், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தகவல் தொகுப்பு மையங்கள் செலவிடும் எரிசக்தியை விட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு எரிசக்தி தேவை குறைவு. அதாவது, இந்தியாவில் 56,800 கோடி கிலோ வாட் எரிசக்தி செலவிடப்படுகிறது. அதைவிட சுமார் 10,000 கோடி கிலோ வாட் மின்சக்தியை தகவல் மையங்கள் பயன்படுத்துகின்றன” என்று அவ்வாய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் விளைவாக உருவாகும் பஞ்சம் காரணமாக 2020ஆம் ஆண்டு சுமார் ஐந்து கோடி மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சுற்றுச்சூழல் அகதிகளாகும் அபாயம் உள்ளதாக வாஷிங்டனில் நடைபெற்ற அறிவியல் முன்னேற்றம் குறித்த மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்பு நேயர்களே, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. எனவே இம்மாதம் சுற்றுசூழல் பாதுகாப்பு மாதமாகவும் பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளிகள், “தேசியப் பசுமையினைப் பாதுகாப்போம்” என்ற சுலோகத்துடன் மரம் நடுதல் உட்பட சுற்றுப்புறப் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. எனவே இம்முயற்சியை யொட்டி பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஜாஸ்மீன் இளமாறன் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கிறார்...... RealAudioMP3
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பரவலாக ஆங்காங்கே நல்ல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பசுமை பாதுகாப்பு குழு சார்பில் மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த கோவையில் இருந்து ஈரோடு வரை சைக்கிள் பிரச்சார பேரணி இந்த ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடத்தப்படுவதாக இத்திங்கள் செய்தியில் வாசித்தோம். சென்னை அடையாறைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு நிபுணரான எம். பார்த்தசாரதி அவர்கள், "மரம் வளர்ப்பை சமுதாயக் கடமையாகப் பார்த்து வருகிறார் எனவும் வாசித்தோம். உறவு, நட்பு, மற்றும் மரியாதைக்கு உரியவர்கள் என்று யாராவது இறந்தால் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறாராம். மருத்துவமனை வளாகத்தில் முறிந்து கிடக்கும் மரத்துக்குச் சிகிச்சை தருகிறாராம். மரம் வளர்ப்பில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு "பச்சை நிறமெல்லாம் பசுமை அல்ல' எனும் தலைப்பில் இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதி வருகிறார். அவருடைய காரின் பின்புறத்தில் எப்போதும் தண்ணீர், மரக்கன்றுகள், கிளைகள் முறிந்தால் கட்டுப்போடுவதற்கு உரிய பொருள்கள் போன்றவை இருக்கும். பொதுவாகக் காலையில் மரங்களைக் கவனித்து, முறிந்த மரத்தின் கிளையை மரத்தோடு இணைத்துக் கட்டுப்போட்டு விடுகிறார். தொடர்ந்து தண்ணீர் ஊற்றி அந்த மரத்தைக் காப்பாற்றி விடுகிறார். மருத்துவர் பார்த்தசாரதி சொல்கிறார் - மரம் வளர்ப்பதால் மாசு குறைகிறது. மழை வருகிறது. மண் கரையாமல் பிடிப்பை உறுதி செய்ய உதவுகிறது. ஊர்வன, நடப்பன உள்ளிட்ட உயிரினங்கள் ஏற்படுத்தும் மாசைக் கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. மனிதன் வெளியேற்றும் கார்பன் வாயுவை உள்வாங்கி பிராண வாயுவை வெளிவிடுகிறது. மரத்தின் மூலம் நிழல் கிடைக்கிறது. சூடான காற்று தென்றலாகிறது. பறவைகளின் சரணாலயமாகவும் மரம் இருக்கிறது. இப்படி மரம் ஓர் உயிர்ப் பாலமாக அமைகிறது என்று.
வெப்பமடைந்து வரும் புவியின் சூட்டைத் தணிக்க தனி மனிதர்களால் செய்யக்கூடிய ஒரு காரியம் மரம் வளர்ப்புதான். ஒரு மரம் வளர்த்தால் ஒரு வளாகத்தில் இரண்டு டிகிரி வெப்பத்தைக் குறைக்க முடியும். உண்மையில் நேரமின்மை என்பது மனிதர்களை மிரட்டும் ஒரு பூதம். நல்லது செய்ய துணிச்சல் வந்தால் நேரம் தானாக வந்துவிடும். நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் சுறுசுறுப்பு இல்லாதவர்கள். 40, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரத்தைச் சரியாகத் திட்டுமிட்டுச் செலவழித்தால் நம் கைக்கு நிறையப் பொருளும் வந்து சேரும்'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் பார்த்தசாரதி.







All the contents on this site are copyrighted ©.