2011-06-27 16:31:26

மத உரிமைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை கடிதம்


ஜூன் 27, 2011. ஒருவர் தான் தேர்ந்து கொள்ளும் மதத்தைப் போதிப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், அது குறித்து எடுத்துரைப்பதற்கும் இருக்கும் உரிமையை வலியுறுத்தி இந்தியாவின் மத்திய பிரதேச மாநில கத்தோலிக்க ஆயர்கள் அவை அம்மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மாநிலத்தின் அமைதிக்கும் இணக்க வாழ்வுக்குமான தன் உறுதியான அர்ப்பணத்தை மாநில முதல்வர் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள கத்தோலிக்க அவையின் இக்கடிதம், மாநில அரசின் பல்வேறு திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்படுவதான ஓர் எண்ணத்தைத் தருவதாகவும் குறைகூறியுள்ளது.
அனைத்து மதங்களும் சம உரிமைகளுடன் நடத்தப்படவேண்டும், மதசகிப்புத்தன்மை வேண்டும், எம்மதமும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பவைகளை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பையும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய பிரதேச ஆயர்களின் கத்தோலிக்க அவை, அரசுப்பள்ளிகளில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்த பாடங்கள் இடம்பெறுவது, குறிப்பிட்ட ஒரு மதக்கல்விக்கென வரி விதிப்பது போன்றவை அரசியலமைப்பிற்கு எதிரானவை எனவும் தன் கடிதத்தில் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.