2011-06-27 16:34:48

உலகில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது


ஜூன் 27, 2011. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இலண்டனின் இம்பீரியல் கல்லூரியும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஹார்வார்டு பலகலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம், உலகம் முழுவதும் நீரழிவு நோய் பெருமளவில் காணப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 1980ம் ஆண்டு 15 கோடியே 30 இலட்சமாக இருந்தது தற்போது 34 கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்கப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், உலகில் மருத்துவச் செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக இவ்வாய்வு மேலும் கூறுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளுக்கென தற்போது ஒவ்வோர் ஆண்டும் உலகில் செலவழிக்கப்படும் 2,200 கோடி பவுண்டுகள் என்பது 2015ம் ஆண்டில் 3000 கோடியாக உயரக்கூடும் என மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.