2011-06-25 15:29:50

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் விசுவாசமாக வாழத் திருத்தந்தை அழைப்பு


ஜூன்25,2011. “விசுவாசமாக இருத்தல்” என்ற நல்ல விழுமியத்தை இழந்த ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளை, இந்த விழுமியமானது இக்காலத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகத்தின் சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கழகத்தினர் தங்கள் வாழ்க்கையில் இந்த விழுமியத்தைக் கடைபிடித்து வாழுமாறு கேட்டுக் கொண்டார்.
கடவுள் வாக்குமாறாதவர், விசுவாசமானவர் என்று விவிலியம் குறிப்பிடுகிறது, எனவே, கடவுளின் அருள் மற்றும் அன்னைமரியின் உதவியுடன், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பிரமாணிக்கமாக வாழுமாறு இக்கழகத்தினருக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இக்கழகத்தினர் வத்திக்கானில் செய்து வரும் தன்னார்வப் பணிகளையும் பாராட்டிப் பேசிய அவர், ஒருவர் பிறர் செபம் செய்வதற்கு உதவ வேண்டுமானால் முதலில் அவரது இதயம் கடவுள் பக்கமாய் இருக்க வேண்டும் மற்றும் புனித இடங்களையும் புனிதப் பொருட்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தூயவர்கள் பேதுரு, பவுல் கழகமானது திருத்தந்தை ஆறாம் பவுலால் 1971ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. இதில் உரோம் நகரின் கத்தோலிக்கர் உறுப்பினர்களாக உள்ளனர். 1850ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் உருவாக்கிய பாப்பிறை இராணுவ அமைப்புகள் உட்பட வத்திக்கானில் இயங்கி வந்த பல்வேறு பாப்பிறைப் பாதுகாப்பு அமைப்புக்களை 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கலைத்தத் திருத்தந்தை ஆறாம் பவுல், தூயவர்கள் பேதுரு, பவுல் கழகம் என்ற புதிய குழுவில் சேருமாறு அவ்வமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தார். இப்புதிய அமைப்பு, திருப்பீடத்துக்குத் தங்களது வரையறையற்ற விசுவாசத்தை வெளிப்படுத்த விரும்பும் உரோம் கத்தோலிக்கருக்காக உருவாக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.