2011-06-25 15:22:55

ஜூன் 26, வாழந்தவர் வழியில்...


ம.பொ.சி. என்று அழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் 1906ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் ஓர் அச்சகத்தில் அதிக ஆண்டுகள் பணி செய்து வந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார் ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். சிலப்பதிகாரத்தில் இவர் கொண்டிருந்த அறிவை நன்கு உணர்ந்த சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை ம.பொ.சி.க்கு ‘சிலம்புச் செல்வர்’ என்ற விருதை வழங்கினார்.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி, தமிழ்நாடு என்ற பெயரை வைக்க ம.பொ.சி. பேராடினார். மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சென்னை ஆந்திராவுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து, தீவிரமாகப் போராடினார்.
இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். கட்டபொம்மனின் வரலாற்றையும், வ.உ.சிதம்பரம்பிள்ளையின் வரலாற்றையும் எழுதினார். இவர் எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்கு 1966ம் ஆண்டு சாகித்திய அக்காடமி விருது கிடைத்தது. 1972ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது. 1995ம் ஆண்டு, ம.பொ.சிவஞானம் தனது 90வது வயதில் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.