2011-06-25 15:41:49

இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்


ஜூன்25,2011. இனப்படுகொலை தொடர்பாக பெண் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தால் முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான ஐநா நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவுலின் நீராமாசுஹூக்கோவுக்கு இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளி்த்துள்ளது.
பவுலினுக்கு எதிரான வழக்கு 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டான்ஸானியாவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளடங்கிய குழுவொன்று, இந்த தீர்ப்பை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கு முடிவில், 65 வயதான பவுலின் நீராமாசுஹூக்கோவுடன் அவரது மகன் உட்பட இன்னும் ஐந்து பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1994ம் ஆண்டு ருவாண்டாவில் இடம் பெற்ற இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் பேர் கொலை செய்யப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.