2011-06-24 15:47:48

ஜூன் 25 வாழ்ந்தவர் வழியில்..


வி. பி. சிங் என அறியப்படும், அரச குடும்பத்தைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங், இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார். இவர் 1931ம் ஆண்டு ஜூன் 25ந்தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார்.
1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டு, தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.
1969-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.
1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதலமைச்சராகப் பணியாற்றினார்.
1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
இராஜீவ் காந்தி தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக்கப்பட்டார். இவர் எடுத்த சில நேர்மையான நடவடிக்கைகளால், அரசுக்கு வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டதால், அதிலிருந்து தூக்கப்பட்டு, பாதுகாப்பு துறை அமைச்சராக்கபபட்டார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் திரட்டத் தொடங்கியதும், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தபோது அதற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 டிசம்பர் 2 லிருந்து 1990 நவம்பர் 10 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.
இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை விலக்கிக்கொண்டது வி.பி.சிங் தான்.
சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்ததும் இவரே.
வி.பி.சிங் 17 ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது. வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 2008ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி மரணம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.