2011-06-23 14:17:27

தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கோரி ஜூலை மாதம் உண்ணாநோன்பு


ஜூன் 23,2011. தலித் கிறிஸ்தவர்களுக்கான இந்திய அமைப்புக்கள் ஒருங்கிணைந்து, ஜூலை மாதம் 25 முதல் 27 முடிய நாடு தழுவிய ஓர் உண்ணாநோன்பை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜூலை 28 அன்று புதுடில்லியில் பாராளு மன்றத்திற்கு மாபெரும் ஒரு பேரணியும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகளை தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் இந்திய தலித் கிறிஸ்தவ அமைப்புக்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன. இதுவரை இந்திய அரசிடம் இருந்து தகுந்த பதில் வராததால், இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக இவ்வமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதால், தீண்டாமை என்ற கொடிய வழக்கத்திலிருந்து அவர்கள் விடுதலை அடைவதில்லை என்று இந்திய உச்ச நீதி மன்றமே கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் சாதீயக் கொடுமைகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர் என்று இந்திய அரசு கூறிவருவது தவறான எண்ணம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர்கள், பல்வேறு தலைவர்கள், கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த மக்கள், இஸ்லாமியர் அனைவரும் இந்த ஜூலை மாத உண்ணாநோன்பு போராட்டத்திலும் பேரணியிலும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.