2011-06-23 14:16:58

ஒரிஸ்ஸா மாநில அரசின் முடிவால் தலத்திருச்சபை அதிருப்தி


ஜூன் 23,2011. தென் கொரிய நாட்டைச் சார்ந்த POSCO என்ற நிறுவனம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் அமைக்கவிருந்த இரும்புத் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தருவதை அந்த மாநில அரசு நிறுத்திவைத்திருப்பது, அரசின் தெளிவான நிலையை உணர்த்தவில்லை என்று தலத் திருச்சபை அதிகாரிகளும், பிற சமுதாய ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.
ஒரிஸ்ஸாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் POSCO நிறுவனத்திற்கென ஒதுக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் நிலத்தைத் தருவதை அவ்வரசு நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசின் தெளிவான முடிவை வெளிக் கொணரவில்லை என்று பழங்குடியினரிடையே உழைத்து வரும் அருள்தந்தை நிக்கோலஸ் பார்லா கூறினார்.
அண்மையில் அப்பகுதியைப் பார்வையிட்ட ஓர் அரசியல் தலைவரின் வருகையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்றும், இது மக்களுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ள ஒரு நிரந்தரத் தீர்வு அல்லவென்றும் கட்டக்-புபனேஸ்வர் உயர்மறைமாவட்ட சமூகப் பணிக்குழுவின் செயலரான அருள்தந்தை சந்தோஷ் திகால் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.