2011-06-23 14:17:44

உலகம் சந்தித்த பொருளாதாரச் சரிவின்போது, பல நாட்டின் அரசுகள் தகுந்த கவனம் செலுத்தவில்லை - ஐ.நா. அறிக்கை


ஜூன் 23,2011. உலகம் அண்மையில் சந்தித்த பொருளாதாரச் சரிவின்போது, இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் உருவாக்கிய பல பாதிப்புக்களுக்கு பல நாட்டின் அரசுகள் தகுந்த கவனம் செலுத்தவில்லை என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
அகில உலகின் சமுதாய நிலை என்ற தலைப்பில் 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை பொருளாதாரம் மற்றும் சமுதாய விவகாரங்களுக்கான ஐ.நா.அமைப்பு இப்புதனன்று வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் 2008-2009 ஆண்டுகளில் உண்டான பொருளாதாரச் சரிவு 1930களில் உருவான பொருளாதாரச் சரிவுக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வேலைகளை இழந்தோரின் எண்ணிக்கையே இந்தப் பொருளாதாரச் சரிவினால் உண்டான பெரும் பாதிப்பு என்று கூறும் இவ்வறிக்கை, 2007ம் ஆண்டில் உலகில் வேலையற்றோர் எண்ணிக்கை 17 கோடியே 80 இலட்சமாக இருந்தது என்றும், இப்பொருளாதாரச் சரிவுக்குப் பின், 2009ம் ஆண்டில் 20 கோடியே 5 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது.
வளரும் நாடுகள் பலவற்றில் மக்களுக்குச் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாததால், இந்நாடுகளில் வேலையற்றோர் இன்னும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டால், இன்று உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் உள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.