2011-06-22 14:50:25

புதிய மறைப்பணி, நாம் ஒவ்வொரு நாளும் கடைபிடிக்கும் வாழ்வு முறை - ஐரோப்பிய ஆயர் பேரவை


ஜூன் 22,2011. புதிய மறைப்பணி என்பது ஒரு மந்திரப்பானம் அல்ல, அது ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடிக்கும் வாழ்வு முறை என்று ஐரோப்பிய ஆயர் பேரவை கூறியுள்ளது.
கடந்த வியாழன் முதல் இச்செவ்வாய் வரை லிதுவேனியாவின் Vilnius என்ற நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் செயலர்கள் மற்றும் பேரவைகளின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், புதிய மறைப்பணி குறித்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
கடவுள் சிந்தனைகள், மதம் ஆகியவை குறித்த எண்ணங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதில் எழும் கேள்விகளுக்கு தகுந்த விடைகளைக் கண்டுபிடிக்க உதவுவதே திருச்சபையின் சிறப்பானப் பணியாக உள்ளதென்று இவ்வறிக்கை கூறுகிறது.
ஐரோப்பாவில் உள்ள 30 ஆயர் பேரவைகளின் செயலர்கள் மற்றும் பேச்சாளர்கள் என 60 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான மத உரிமைகள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஸ்பெயின் நாட்டு, மத்ரிதில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக இளையோர் நாள், வரும் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் குடும்பங்களின் அகில உலக மாநாடு, மற்றும் வரும் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறும் அகில உலக நற்கருணை மாநாடு என்ற அகில உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கியமான மூன்று கூட்டங்கள் ஐரோப்பாவில் நடைபெற உள்ளதைக் குறித்து இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.









All the contents on this site are copyrighted ©.