2011-06-22 16:07:02

ஜூன் 23, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


இந்தியக் குடியரசின் நான்காவது அரசுத்தலைவர் வி.வி .கிரி (வராககிரி வேங்கட கிரி) 1894ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார்.
இவர் தொழிலாளர் இயக்கத்தில் பொதுச் செயலராக பெரிதும் ஈடுபட்டார்.
அன்றைய மதராஸ் மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937ம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார். 1942ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியபோது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்கத்திற்குத் திரும்பினார் . ஆங்கில அரசு அவரைச் சிறையில் தள்ளியது.
இந்தியச் சுதந்திரத்துக்குப் பின்னர், அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுனராகப் பணியாற்றினார்.
1967ம் ஆண்டு இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுசைனின் பதவிக்கால மரணத்தினால் 1969ம் ஆண்டு கிரி தற்காலிக குடியரசுத்தலைவரானார். குடியரசுத்தலைவர் பதவிக்கானத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்று 1974ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத இரத்னாவை 1975ம் ஆண்டு பெற்றார் கிரி.
கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர். இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.
குடியரசுத்தலைவர் வி்.வி் கிரி, 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.