2011-06-21 15:53:32

வறுமை சூழ்ந்த, வளரும் நாடுகளில் அகதிகள் அதிகமாய் தஞ்சம் புகுந்துள்ளனர் - ஐ.நா. அறிக்கை


ஜூன் 21,2011. உலகில் அகதிகளாய் வாழ்பவர்களில் 80 விழுக்காட்டினர் வறுமை சூழ்ந்த வளரும் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜூன் 20, இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட உலக அகதிகள் நாளை முன்னிட்டு, ஐ.நா.வின் அகதிகள் பணிக்கான உயர்மட்டக் குழு UNHCR வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வருமானம், மக்கள்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, வறிய, வளரும் நாடுகள் அகதிகளைத் தங்கள் நாடுகளில் தங்க வைப்பதால், அவர்கள் பொருளாதாரத்திற்கு இன்னும் சவால்கள் அதிகமாகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
வளரும் நாடுகளிலேயே பாகிஸ்தான், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் 19 இலட்சம், 10 இலட்சத்து 70 ஆயிரம், மற்றும் 10 இலட்சத்து 5 ஆயிரம் என்ற அளவில் அதிகப்படியான அகதிகள் தங்கியுள்ளனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
செல்வம் மிகுந்த, வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் அகதிகள் வெள்ளமென சேர்ந்துவிடக் கூடும் என்று அந்நாடுகள் தங்கள் அச்சத்தை வெளியிடுவதும், அதற்கு முன்னேற்பாடாக, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஏனைய ஏழை நாடுகளில் இவர்கள் தஞ்சம் புகுவதற்கு வழி வகுக்கின்றன என்றும், இதனால், வறிய நாடுகளின் பாரம் இன்னும் அதிகமாகின்றன என்றும் ஐ.நா.உயர் அதிகாரி Antonio Guterres கூறினார்.
உலகெங்கும் இன்றைய நிலவரப்படி, 4 கோடியே 37 இலட்சம் பேர் புலம் பெயர்ந்தோராய் வாழ்கின்றனர் என்றும், 2004ம் ஆண்டு முதல் உலகின் பல நாடுகளில் மோதல்களும், போரும் அதிகமாகியுள்ளதால், புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடி வருகிறதென்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.