2011-06-21 16:28:18

ஜூன் 22வாழந்தவர் வழியில்...


அறிஞராக, ஆயராக, கர்தினாலாக வாழ்ந்து மறைசாட்சியாக உயிர்துறந்த John Fisher, 15ம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் பிறந்தவர். Cambridge பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர், தன் அறிவுத் திறனால் படிப்படியாக உயர்ந்து, அப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.
இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற Fisher, இங்கிலாந்து அரசர் 7ம் ஹென்றியின் பரிந்துரையால், 1504ம் ஆண்டு ஆயராக நியமிக்கப்பட்டார். மிக ஏழ்மை நிலையில் இருந்த Rochester என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்ற இவர், அதே மறைமாவட்டத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றினார்.
அரசர் 8ம் ஹென்றி தன் மனைவி கேத்தரீனை மணமுறிவு செய்துவிட முனைந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார் ஆயர் Fisher. தவறு செய்வது அரசரே ஆனாலும், புனித திருமுழுக்கு யோவானைப் போல், தானும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், அப்புனிதரைப் போல் உயிரைத் தரவும் தயார் என்று கூறினார் John Fisher.
8ம் ஹென்றி கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகி, இங்கிலாந்து சபையை நிறுவி, அதற்குத் தன்னையே தலைவன் என்று அறிவித்ததை ஆயர் John Fisher வன்மையாக எதிர்த்தார். அரசு அதிகாரியாக இருந்த Thomas More என்பவரும் மன்னனின் இந்த முடிவை எதிர்த்தார். இருவரும் லண்டன் கோபுரம் என்று அழைக்கப்படும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாயினர்.
1535ம் ஆண்டு திருத்தந்தை 3ம் பவுல் John Fisherஐ கர்தினாலாக உயர்த்தினார். கர்தினாலுக்குரிய தனிப்பட்ட தொப்பியொன்றை John Fisherக்கு அனுப்பி வைக்க வத்திக்கான் தீர்மானித்தபோது, அரசன் 8ம் ஹென்றி அதைத் தடை செய்தான். தேவையென்றால் ஆயர் Fisherன் தலையை தான் உரோம் நகருக்கு அனுப்பி வைப்பதாக அரசன் கூறினான்.
1535ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி John Fisher, அவரது பாதுகாவலராகிய திருமுழுக்கு யோவானைப் போல், தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். 400 ஆண்டுகளுக்குப் பின், 1935ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பத்தினாதரால் John Fisherம் Thomas Moreம் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர். புனித John Fisherன் திருநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.