2011-06-20 16:16:56

வாரம் ஓர் அலசல் – "தவறுகளை மறைப்பது தலைவலிகளைக் கொடுக்கும்!"


ஜூன் 20, 2011. அண்மையில் ஓர் இதழில் வாசித்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். அந்த ஆசிரமத்தில் குரு போதித்துக் கொண்டிருந்த போது ஒருவர் எழுந்து அவரிடம், “குருவே, எனது மனது மிகவும் பாரமாக இருக்கிறது. நான் ஒரு தப்பு செய்து விட்டேன். அது என் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது!’ என்றார். அவரின் பிரச்சனை குருவுக்கு ஓரளவு புரிந்துவிடவே, அவருக்கு ஒரு கதையைச் சொன்னார்....
“இரஞ்சன், இரஞ்சினி ஆகிய இவர்கள் இருவரும் உடன் பிறப்புக்கள். நகரத்தில் வாழ்ந்து வந்த இந்தச் சிறார் ஒரு கோடை விடுமுறைக்குத் தங்களது பூர்வீகக் கிராமத்தில் வாழும் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். அவர்களுக்கு அந்தக் கிராமத்துத் தென்னந் தோப்புகள், மாந்தோப்புகள், வயல்காடுகள், கண்மாய்கள் போன்ற இவைகள் அனைத்தும் மிகவும் பிடித்திருந்தன. தினமும் அக்காவும் தம்பியும் இந்தத் தோப்புகளில் விளையாடி மகிழ்ந்தார்கள். ஒருநாள் இப்படி விளையாடிக் கொண்டிருந்த போது இரஞ்சன் மாமரத்தில் அடித்த கல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழி மேல் விழுந்து அது செத்துப் போய்விட்டது. பாட்டி செல்லமாய் வளர்த்த கோழி அது. எனவே பாட்டி திட்டுவார்களே என்று பயந்த இரஞ்சன் அதனைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு மூலையில் இருந்த குப்பைக்குள் போட்டு புதைத்து விட்டான். ஆனால் அவன் பிரச்சனை அதோடு முடியவில்லை. அவன் அப்படிச் செய்ததை அவனுடன் இருந்த அவன் அக்கா இரஞ்சினி பார்த்துவிட்டாள். அவள் தம்பியை மிரட்ட ஆரம்பித்தாள். “பாட்டிக்கிட்ட சொல்லிடுவேன், மாட்டிவிட்டுருவேன்னு” மிரட்டியே அவனை நன்றாக வேலை வாங்கினாள். இது இரஞ்சனுக்கு அதிக வருத்தம் கொடுத்தது. அக்காவிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவள் சொல்வதையெல்லாம் செய்தான். இந்த மிரட்டலை நான்கைந்து நாட்களுக்கு மேல் அவனால தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே பாட்டியிடம் போய் அழுது உண்மையைச் சொல்லிவிட்டான். அப்போது அவன் பாட்டி, “இந்தத் தப்பை நீ முதல்லேயே என்கிட்ட சொல்லியிருந்தின்னா இவ்வளவு மன வேதனை இருந்திருக்காதுல்ல. தப்பை ஒத்துக்கிறதுனால நிறைய பிரச்சனைலருந்து தப்பிக்கலாம்” என்று சொன்னார். சிறுவனும் பிரச்சனை தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டான்.
இந்தக் கதையைக் குரு சொல்லி முடித்தபோது கேள்வி கேட்டவருக்குத் தான் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது புரிந்து அங்கிருந்து நிம்மதியாகச் சென்றுவிட்டாராம். இந்தக் கதையை விவரித்தவர் மேலும் சொல்கிறார் “தவறுகளை மறைப்பது தலைவலிகளைக் கொடுக்கும்!” என்று. தவறுகளை மறைத்து வாழ்பவர்கள் தலைவலிகளால் நிச்சயம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. செய்த தவறுகளை மறைத்து வாழ்ந்தால் தலைவலி மட்டுமல்ல இன்னும் பிற மனவலிகளும் அதனால் வேறு பல உடல் உபாதைகளும் ஏற்படும். ஒரு தவறை மறைக்க மேலும் பல தவறுகள் செய்ய வேண்டியிருக்கும். மனநிம்மதியும் அன்றோடு தொலைந்து போகும். ஆனால் நெடுநாள் தவறுகள் விரைவில் அம்பலமாகியும் விடும். நீண்ட நாட்களுக்கு அவற்றை மறைத்து வைக்க முடியாது. எப்படியாவது யார் மூலமாகவாவது வெளியாகி விடும்.
நாற்பதாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள ஹசன் அலியின் நடவடிக்கை, 2ஜி'அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, சில அரபு நாடுகளில் நடக்கும் போராட்டத்திற்கான காரணிகள் இப்படி பல நிகழ்வுகளை இதற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கூறலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கிராமத்தில் இரண்டு படித்த இளைஞர்கள் அந்த ஊரில் பல குடும்பங்களுக்கு கையெழுத்துப் போடாத கடிதங்களை அனுப்பினர். அந்த மொட்டைக் கடிதங்களில் ஊரில் ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் சேர்த்து ஆபாசமாக எழுதப்பட்டிருந்தது. ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம். இதனை அனுப்பியவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தார்கள், ஆனால் முடியவில்லை. இது நடந்து ஒரு மாதம் கழித்து அந்த ஊருக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கள்ளுக் கடையில் இரண்டு இளைஞர்கள் நன்றாகக் குடித்தப் போதையில் அக்கடிதங்கள் பற்றி உளறிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட பக்கத்து ஊர் ஆட்கள் செய்தியைச் சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன, அந்த இரண்டு படித்த இளைஞர்கள் மட்டுமல்ல, அவர்களால் அவர்களது குடும்பத்தினரும் நையப் புடைக்கப்பட்டனர். ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்டனர். அந்த ஊரில் அக்குடும்பங்கள் வாழ முடியாதபடி வெளியேறி விட்டனர். ஆம். தவறுகள் மறைக்கப்படுவதால் ஏற்படும் தலைவலிகள் எவ்வளவு கடுமையாக இருக்கின்றன!. படித்த முட்டாள்களாகிய இந்த இளைஞர்கள் இந்தத் தவற்றைச் செய்திருக்கவே கூடாது. அப்படி அறிவில்லாமல் செய்தத் தவறுகளை ஊர்ப் பெரியவர்களிடம் முதலிலே சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். மன்னிப்புக் கேட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

தவறு செய்த இவர்கள் அனுபவித்த மனஉளைச்சலும் சொல்லும் தரமன்று. ஒருமுறை கானாடவில் ஒரு திருடன் ஒரு நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அந்தக் கடை முதலாளியைச் சுட்டுவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகளைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டான். குற்றவாளிகள் எத்தனை நாட்களுக்கு மறைந்து ஒளிந்து பதுங்கி வாழ முடியும்? எப்படியும் சரணனடைந்துதானே ஆக வேண்டும். தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவன் நாவரசுக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான்டேவிட் தப்பி ஆஸ்திரேலியா சென்றார். ஆனால் அவருக்கு மீண்டும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது அல்லவா? எனவே குற்றவாளிகள் காவல்துறையின் கண்களிலிருந்து நீண்ட காலத்திற்குத் தப்ப முடியாது. கானடாவிலும் இந்தத் திருடன் பிடிபட்டான். சிறையில் அடைக்கப்பட்டான். அவன் விசாரணைக்காக நீதிமன்றம் வந்த போது அவன் நீதிபதியின் கால்களைப் பற்றிக் கொண்டு கதறி அழுதான். என்ன சொல்லி அழுதான் தெரியுமா?.
“கனம் நீதிபதி அவர்களே, எனக்கு மரண தண்டனை கொடுங்கள். நான்தான் அந்தக் கடை முதலாளியைக் கொன்றேன். அவரை நான் அவரைச் சுட்டதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். மெதுவாக எழுந்திருக்கத் துடித்தார். முடியவில்லை. கைகளைத் தூக்கி, உதவி, உதவி என்று கத்தினார். அந்த நேரம் என்னைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை. எனது கல்நெஞ்சு அவருக்கு உதவி செய்யவில்லை. அவர் உயிரைக் காப்பாற்றவில்லை. அவர் இறந்து விட்டார். இப்பொழுது சிறையில் இருக்கும் எனக்கு அந்தக் காட்சி இரவும் பகலும் வந்து என்னை வாட்டி வதைக்கிறது. என்னால் ஒரு நொடிப்பொழுதுகூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை. தயவுசெய்து எனக்கு விரைவில் மரணதண்டனை தீர்ப்பளியுங்கள், என்னைத் தூக்கில் போடுங்கள், என்னால் தாங்கவே முடியவில்லை” என்றார்.
தவறு செய்பவர்கள் எல்லாருமா இப்படி மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பெரிய பெரிய யானைகளை முழுங்கிவிட்டு வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையோடு நிமிர்ந்து நடக்கிறார்களே என்று கேட்கலாம். கோயம்புத்தூரில் "பச்சிளம் குழந்தைகள் நாள் வாடகைக்கு... தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்' என, விளம்பரம் செய்யாதக் குறையாகக் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்கப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக இந்த ஏப்ரல் 25ம் தேதி செய்தியில் வாசித்தோம். பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், குழந்தையின் பரிதாபத் தோற்றத்தைக் காட்டி பிச்சை கேட்கின்றனர். ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் இரத்தக் காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாகக் காணும் வகையில் காயங்களும் உள்ளன. குழந்தைகளைப் பார்க்கும் பலரும் பத்து அல்லது இருபது ரூபாய்க் கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இவ்வாறு, ஒவ்வொரு பெண்ணும் நாளொன்றுக்கு குறைந்தது 500 ரூபாய் வரைச் சம்பாத்தியம் பார்ப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் குற்றக் கும்பல் என்று பிடிபடப் போகிறதோ? தவறுகள் சிறியதோ பெரியதோ எதுவானாலும் அவற்றை மறைத்து வாழ்வது மனத்தை தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருக்கும். அரித்துக் கொண்டே இருக்கும். அதற்கு மாறாக அவற்றை வெளியிட்டு அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் போது அவை வாழ்க்கையைக் குணப்படுத்தும், பக்குவப்படுத்தும். மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தையும் அகற்றும். மனதில் பாரம் இல்லையென்றால் வாழ்க்கையில் "செஞ்சுரியே' அடிக்கலாம்!.
நேர்மை எனும் நல்ல பண்பால் தங்களை அழகுபடுத்தியவர்கள் தவறுகளை ஒத்துக் கொள்ளத் தவறியதில்லை. நேர்மைக்கு மாறாகவும் அறத்துக்குப் புறம்பாகவும் பொதுச்சொத்திலிருந்து ஒரு காசுகூட தனது சொந்தத் தேவைக்காக எடுக்காத நல்ல மனிதர்கள் அரசியலில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் எந்த நிலையிலும் நேர்மையிலிருந்து தவறக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவர்கள். மொரார்ஜி தேசாய், பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, அவரது மகள் “இந்து” மருத்துவக் கல்லூரியின் இறுதித் தேர்வில் தேறவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்து, முதல் வகுப்பில் தேர்ச்சியடைய வேண்டியவள். எனவே இந்தத் தோல்வியை அவளது சக மாணவிகள் நம்ப மறுத்தனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்குத் தந்தையிடம் அனுமதி கேட்டாள் இந்து. தந்தை தேசாயோ, “இதில் திருத்தியவர்களின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு உரிய மதிப்பெண்களைப் பெற்று நீ தேர்ச்சியடைந்தாலும் நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினேன் என்றுதான் உலகம் சொல்லும். எனவே அடுத்த தேர்வுக்கு உன்னைச் சிறப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது” என்று சொல்லிவிட்டார். இதில் மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டாள். மகளின் இழப்பையும் தேசாய் மௌனமாகத் தாங்கிக் கொண்டார். பம்பாய் முதல்வராக, இந்தியாவின் பிரதமராக, இந்திய அரசின் நிதியமைச்சராக இருந்த தேசாய் தனது வாழ்வின் இறுதி நாட்களில் பலர் வாழும் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வாடகை வீட்டில்தான் இருந்தார் என்பது எல்லாரும் அறிந்ததே.
ஆம். நேர்மை ஒரு மனிதனை எப்போதும் தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும். எவ்வாறு நெருப்பைக் கரையானால் அரிக்க முடியாதோ அவ்வாறே நேர்மையாளரைப் பழியும் பாவமும் நெருங்காது. இவர்கள் செல்வத்தில் ஏழைகளாக இருந்தாலும் பண்பில் பணக்காரர்களாக இருப்பார்கள். தவறுகளை மறைப்பதால் தொற்றிக் கொள்ளும் தலைவலிகள் இவர்களை ஒருபோதும் அண்டாது. ஆதலால் அன்பர்களே, தவறுகள் செய்யும் போது அவற்றை ஏற்று அதற்கானப் பரிகாரம் செய்ய முயற்சிப்போம். அப்போது "தவறுகளை மறைப்பதால் உண்டாகும் தலைவலிகளைத் தவிர்க்கலாம்".








All the contents on this site are copyrighted ©.