2011-06-20 16:18:54

திருத்தந்தை : சான் மரினோ குடியரசின் உண்மைச் செல்வம் அதன் விசுவாசமே


ஜூன் 20, 2011. சான் மரினோ குடியரசின் தனித்துவத்திற்கு மூல ஆதாரமாக இருக்கும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் போற்றிப் பாதுகாக்க அந்நாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று, சான் மரினோ குடியரசில் ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவ மதிப்பீடுகளில் தன் ஆதாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடு, மக்களின் உண்மை நலனில் அக்கறையுள்ளதாயும், அவர்களின் மாண்பு மற்றும் விடுதலைக்கு உழைப்பதாயும், மக்கள் அனைவரும் அமைதியில் வாழும் வண்ணம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாயும் இருக்கும் என அரசியல் தலைவர்களுக்கான உரையில் குறிப்பிட்டார்.
கருவில் உருவானது முதல் மனித உயிர் இயற்கையாக மரணமடையும் வரை ஊக்குவித்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் திருச்சபை, குடும்பங்களுக்கான தன் தொடர்ந்த ஆதரவை வழங்கி வருகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை.
சான் மரினோ குடியரசின் உண்மையான செல்வம் என்பது அதன் விசுவாசமே என்ற பாப்பிறை, நுகர்வுக் கலாச்சாரத்தின் சவால்களை எதிர்கொண்டு வரும் இன்றைய உலகில் விசுவாசம் எனும் கொடையைப் பாதுகாத்துக் காப்பாற்றவேண்டிய கத்தோலிக்கர்களின் கடமையையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.