2011-06-18 17:23:27

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் அமைதிக்கான செபம்


ஜூன் 18,2011. பாகிஸ்தானின் கராச்சியில் அண்மை நாட்களில் மக்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருவதால் கிறிஸ்தவர்கள் பதட்ட நிலைகளின் மத்தியில் தினசரி செபத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வருவதாக UCAN செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
குழுக்களிடையே இடம்பெறும் மோதல்களைத் தடுத்து நிறுத்தவோ, அல்லது அவைகளுக்குத் தீர்வு காணவோ அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் மக்கள் அச்சத்தின் பிடியிலும் வன்முறையின் பாதிப்பிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார் நீதி மற்றும் அமைதிக்கான தேசிய அவையின் மறைமாவட்ட இயக்குனர் குரு சாலே தியேகோ.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உரைத்த குரு, ஆயுதம் தாங்கிய சில குழுக்களால் பல கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல்களால் கடைகளும் சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், மக்களிடையேயான நிவாரணப்பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் பணியாளர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.