2011-06-17 14:24:44

வளர்ச்சியடைந்த மூல உயிரணுக்கள் (Adult Stem Cells) தொடர்பான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு வத்திக்கானில் நடைபெறும்


ஜூன் 17,2011. வளர்ச்சியடைந்த மூல உயிரணுக்கள் (Adult Stem Cells) தொடர்பான ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை வருகிற நவம்பர் மாதம் வத்திக்கானில் நடத்தவிருப்பதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கலாச்சாரத்திற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi தலைமையில், இவ்வியாழனன்று வத்திக்கானில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் இக்கருத்தரங்கைக் குறித்து அறிவிப்புக்கள் வெளியாயின.
"மூல உயிரணுக்கள்: மனிதர் மற்றும் கலாச்சாரத்தின் அறிவியலும், எதிர்காலமும்" என்ற தலைப்பில் வருகிற நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை இந்தக் கருத்தரங்கு நடைபெறும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை Tomasz Trafny செய்தியாளர்களிடம் கூறினார்.
கலாச்சாரத்திற்கானத் திருப்பீட அவை, அண்மைக் காலங்களில், அறிவியலுக்கும் மெய்யியல் மற்றும் இறையியலுக்கும் இடையே கலந்துரையாடல்களை ஆதரித்து வருகிறது என்றும், அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாக இந்த கருத்தரங்கு அமையும் என்றும் அருள்தந்தை Trafny எடுத்துரைத்தார்.
மூல உயிரணுக்கள் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் NeoStem என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து திருப்பீட அவை நடத்தும் இந்தக் கருத்தரங்கில் அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளின் அறிஞர்கள் மட்டுமல்ல, மாறாக, இறையியல், கலாச்சாரம் ஆகிய துறைகளின் அறிஞர்களும் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.