2011-06-17 14:24:19

தமிழக, மற்றும் சத்திஸ்கர் மாநில ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


ஜூன் 17,2011. ஏக, பரிசுத்த, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்கத் திருச்சபை என்று நாம் விசுவாச அறிக்கையிடும் திருச்சபையின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பது ஆயர்களின் மிக முக்கியமான கடமை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி தமிழகத்திலிருந்தும், சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும் உரோம் நகர் வந்துள்ள அனைத்து ஆயர்களையும் இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், திருச்சபையின் ஒருமைப்பாட்டினை ஆயர்கள் எவ்விதங்களில் வளர்க்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்துவின் குருத்துவத்தைப் பல நிலைகளில் பகிர்ந்து கொள்ளும் ஆயர்களுக்கும், குருக்களுக்கும் இடையே நிலவும் முக்கியமான உறவு, திருச்சபையின் ஒருமைப்பாட்டை உலகிற்கு எடுத்துக் கூறும் ஒரு முக்கிய வழி என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, மறைமாவட்ட, மற்றும் துறவறக் குருக்களுக்கு ஆயர்கள் வழங்க வேண்டிய ஆதரவு பற்றியும் எடுத்துரைத்தார்.
ஜாதி, மற்றும் இனம் ஆகிய பாகுபாடுகள் அல்லாமல், கடவுளின் அன்பு ஒன்றையே மையப்படுத்திய வண்ணம் ஆயர்களுக்கும், குருக்களுக்கும் இடையே உறவுகள் இருப்பதையே விசுவாசிகள் பெரிதும் விரும்புகின்றனர் என்று திருத்தந்தை கூறினார்.
இந்தியாவில் உள்ள பல துறவறச் சபைத் தலைவர்களுடன் ஆயர்கள் நெருங்கிய ஒத்துழைப்பை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறிய பாப்பிறை, துறவியரின் தேர்வு, பயிற்சி ஆகியவைகளில் காட்டப்பட வேண்டிய கவனம், மற்றும் துறவியரின் தொடர்ந்த பயிற்சிகள் ஆகியவை குறித்தும் பேசினார்.
திருச்சபையின் தனிப்பட்ட பாராட்டுக்களுக்கு உரியவர்கள் இந்தியாவில் பணி புரியும் பெண் துறவிகள் என்பதைக் கூறிய திருத்தந்தை, பலரது கவனத்தை ஈர்க்காமல் அவர்கள் செய்து வரும் உயர்ந்த பணிகள் கடவுளின் அரசைக் கட்டியெழுப்புகின்றன என்று கூறினார்.
பெண் துறவிகளின் அழைத்தல்களை ஊக்குவிக்கவும், இறைவனுக்கும், மக்களுக்கும் பணி செய்ய விழையும் இளம்பெண்களை துறவு வாழ்வைப் போன்ற பிற அர்ப்பணம் நிறைந்த வாழ்விலும் உற்சாகப்படுத்தவும் ஆயர்கள் முன்வர வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
திருச்சபையின் தாயான மரியன்னையின் பரிந்துரை வழியாக தன் சகோதர ஆயர்கள் அனைவரையும் தான் சிறப்பாக ஆசீர்வதிப்பதாகக் கூறி, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.