2011-06-17 14:26:00

ஐ.நா.அமைப்பின் ஆதரவுடன் Gaza பகுதியில் நடத்தப்படும் கோடைக்கால விளையாட்டுக்கள்


ஜூன் 17,2011. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைக்குரிய Gaza பகுதியில் ஐ.நா.அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்படும் கோடைக்கால விளையாட்டுக்கள் இவ்வியாழனன்று ஆரம்பமானது.
UNRWA எனப்படும் ஐ.நா.அமைப்பினால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் இந்த விளையாட்டு விழா அப்பகுதியில் வாழும் 2,50,000 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு என்றும், இவ்விளையாட்டுக்கள் ஜூலை மாத இறுதி வரை நடைபெறும் என்றும் ஐ.நா.வின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
பிரச்சனைகளும், போர்ச்சூழலும் எப்போதும் நிலவி வரும் Gaza பகுதியில் வாழும் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்தவர்கள் என்றும், இவர்களுக்கு மீண்டும் தங்கள் குழந்தைப் பருவ மகிழ்வைத் தருவதே இந்த விளையாட்டுக்களின் முக்கியக் குறிக்கோள் என்றும் இவ்விளையாட்டுக்களின் அமைப்பாளரான ஐ.நா.அதிகாரி Christer Nordhal கூறினார்.
அகில உலகெங்கும் மனித உரிமைகள் போற்றப்பட வேண்டும் என்பதில் தனி ஆர்வம் கொண்டுள்ள ஐ.நா. அமைப்பு, இக்குழந்தைகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதன் வழியாக, தங்கள் தனிமனித மாண்பையும் உணர்ந்து கொள்ள இவ்விளையாட்டுக்கள் வாய்ப்பளிக்கின்றன என்று ஐ.நா. அதிகாரி மேலும் கூறினார்.
இவ்வியாழன் முதல் ஏறத்தாழ நாற்பது நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுக்களில் உலகச் சாதனைகளும், கின்னஸ் சாதனைகளும் உருவாகும் வாய்ப்புக்கள் உண்டு என்று ஐ.நா.செய்திக் குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.