2011-06-16 13:48:06

பாகிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரி தலையிட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி


ஜூன் 16,2011. பாகிஸ்தானில் Farah Hatim என்ற கிறிஸ்துவப் பெண்ணை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக அவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும், அவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கவும் நடைபெறும் முயற்சிகளைத் தடுக்க ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் உயர் அதிகாரி தலையிட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இப்புதனன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, பாகிஸ்தானில் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டி, மதச் சுதந்திரம் மதிக்கப்படுவது மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா என்பதற்கு சரியான ஒரு உரைகல் என்று கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் பாகிஸ்தானில் 700க்கு மேற்பட்ட இளம் கிறிஸ்தவப் பெண்கள் கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என்று வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனம் கூறுகிறது.
கடத்தப்பட்டுள்ள Farah Hatimன் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு முழு உண்மைகளைத் தெரிந்து கொள்ள பாகிஸ்தான் அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று பேராயர் வற்புறுத்தினார்.
பாகிஸ்தானில் கல்வித் துறை, பொது நலத் துறை இன்னும் பிற அரசுத் துறைகளில் ஊடுருவியிருக்கும் ஊழல் மற்றும் அடிப்படைவாதப் போக்குகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வர ஆர்வம் காட்டாமல் இருப்பதை எடுத்துக் கூறிய பேராயர் தொமாசி, ஊடகங்களின் இந்த அலட்சியப் போக்கால் அந்த நாட்டில் மத நம்பிக்கை கொண்டவர்கள் பல இலட்சம் பேர் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.
ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும், மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் தற்போது உருவாகியுள்ள பல மாற்றங்கள் மனிதர்கள் இன்னும் அதிகச் சுதந்திரமாகவும், மனித மாண்புடனும் வாழ்வதற்கான அறிகுறிகளாய் தெரிகிறதென பேராயர் தொமாசி தன் நம்பிக்கையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.