2011-06-16 13:49:08

தெருவோரக் குழந்தைகளின் நல்வாழ்வை மையப்படுத்திய ஆப்ரிக்கக் குழந்தைகள் நாள்


ஜூன் 16,2011. "தெருவோரக் குழந்தைகளுக்கு நல்வாழ்வு வழங்க உடனடியானச் செயல்கள்" என்ற மையக்கருத்துடன் இவ்வியாழனன்று ஆப்ரிக்கக் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது.
1976ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் Johannesburg மாநகரின் புறநகர் பகுதியான Sowetoவில் 20,000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள், மற்றும் இளையோர் திரண்டு மேற்கொண்ட போராட்டத்தை அடக்க, தென்னாப்ரிக்க அரசு மேற்கொண்ட வன்முறையில் 176 கொல்லப்பட்டனர். 1990ம் ஆண்டிலிருந்து ஜூன் 16ம் தேதி ஆப்ரிக்க குழந்தைகள் மற்றும் இளையோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு கொண்டாடப்பட்ட இந்த நாளையொட்டி, தென்னாப்ரிக்கா, ஐவரி கோஸ்ட், செனெகல், டான்சானியா உட்பட பல நாடுகளில் பேரணிகளையும் இன்னும் பிற பொதுநலச் செயல்களையும் ஐ.நா.வின் UNICEF நிறுவனம் ஏற்பாடு செய்தது.
குழந்தைகள் மற்றும் இளையோரின் எதிர்காலம் நலமாக அமைய, குடும்பங்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்பது இந்த ஆண்டின் முக்கிய கருத்தாக இருந்ததென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினருக்கும் மேல் 30 வயதுக்குக் குறைந்தவர்கள் என்று கூறும் ஓர் ஐ.நா.வின் அறிக்கை, இந்நாடுகளில் உள்ள இளையோர் வேலையின்மை, உடல் நலம் ஆகிய காரணங்களால் பிற நாடுகளுக்குச் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.