2011-06-16 13:47:29

அகில உலக வர்த்தகக் கருத்தரங்கில் திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்தோனே வழங்கிய துவக்க உரை


ஜூன் 16,2011. வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தங்களுக்கும், பிறருக்கும் பயனுள்ள திட்டங்களை, புதிது, புதிதாக கண்டுபிடித்து செயல்படுத்த திறமை பெற்றவர்கள் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
இவ்வியாழனன்று வத்திக்கானில் துவங்கியுள்ள ஒரு அகில உலக வர்த்தகக் கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்தோனே, வர்த்தகம் என்பது அதைத் தாண்டிய மற்ற உண்மைகளுக்கு வழியாக அமைய வேண்டுமேயொழிய, அது தன்னிலேயே முழுமை அடைய முடியாது என்பதை எடுத்துரைத்தார்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், பொது நலனுக்கும் வர்த்தகம் ஒரு முக்கியமான தேவை என்பதை திருச்சபை துவக்கத்திலிருந்தே கூறி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பெர்தோனே, Centesimus Annus மற்றும் Caritas in Veritate ஆகிய சுற்றுமடல்கள் மூலம் திருத்தந்தையர் கூறிவரும் அறிவுரைகளையும் கருத்தரங்கின் அங்கத்தினர்களுக்கு நினைவுபடுத்தினார்.
நன்னெறி இன்றி வர்த்தகத் தலைவர்கள் செயல்பட இயலாது என்பதைக் கூறியுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் Caritas in Veritate பற்றி சிறப்பான முறையில் குறிப்பிட்ட கர்தினால் பெர்தோனே, மனசாட்சியுடன் செயல்படும் வர்த்தகத் தலைவர்கள் இன்றைய உலகிற்கு மிகவும் தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
சுற்றுச்சூழல் குறித்தும், பூமியின் வளங்கள் குறித்தும் விழிப்புணர்வு வளர்ந்து வரும் வேளையில், இந்த வளங்களையும், சுற்றுச்சூழலையும் அனைத்து உலகத்திற்கும் பயன்படும் வகையில் வர்த்தக உலகம் பயன்படுத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தன் துவக்க உரையில் முன் வைத்தார்.









All the contents on this site are copyrighted ©.