2011-06-15 16:17:49

திருத்தந்தை: விசுவாசத்தை எடுத்துரைப்பதும், வளர்ப்பதும் அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை


ஜூன் 15,2011. இவ்வுலகில் விசுவாசம் தானாகவே நிலைபெறாது; அதனை அறிக்கையிடுவதாலும், அதனை ஒவ்வொரு தலைமுறைக்கும் சொல்லித் தருவதாலுமே விசுவாசம் இவ்வுலகில் வளர முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்செவ்வாய் முதல் விழாயன் வரை நடைபெறும் உரோம் மறைமாவட்டத்தின் 2011ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை இத்திங்கள் மாலை புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் துவக்கிவைத்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
‘விசுவாசத்தை வளர்ப்பதில் நாம் பெறும் மகிழ்ச்சி’ என்ற மையக் கருத்தைக் கொண்டு நடத்தப்படும் இந்தhd பொதுக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்காகத் திருத்தந்தை சென்றிருந்தபோது, புனித ஜான் லாத்தரன் பேராலயம் நிறைந்திருந்ததாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கிறிஸ்துவை நம்பி, அவர் மீது அன்பு கொள்ளும் உள்ளத்திலிருந்தே விசுவாசம் பயனுள்ள வகையில் வெளிப்பட முடியும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக் காட்டினார்.
இன்றைய உலகில் இயேசுவை வெறும் மனிதராக, ஒரு இறைவாக்கினராக கருதும் எண்ணங்கள் அதிகம் பரவி வருகிறதைக் குறித்து தன் கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, விசுவாசத்தை எடுத்துரைப்பதும், வளர்ப்பதும் திருச்சபையின் ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள பணி அல்ல, மாறாக, அது அனைத்து விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கடமை என்பதை தன் துவக்க உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.