2011-06-15 16:19:38

ஆசியாவில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை விரும்புவதால் பிரச்சனைகள் - ஐ.நா.நிறுவனங்கள் கவலை


ஜூன் 15,2011. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை ஆசியாவின் பல நாடுகள் விரும்புவதால், அந்நாடுகள் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளைக் குறித்து ஐ.நா.வின் ஐந்து முக்கிய நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளன.
சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஆசியாவின் பல நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பெருகி வருகின்றன என்றும், அவற்றில் வருங்காலத்தையும் பாதிக்கக்கூடிய ஓர் அநீதி பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் உலக நலவாழ்வு நிறுவனமான WHO, குழந்தைகள் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான UNICEF, மனித உரிமைகளின் உயர் கழகமான OHCHR உட்பட ஐந்து ஐ.நா.நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலையை வெளியிட்டுள்ளன.
பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் தகுந்த பராமரிப்பின்றி ஒதுக்கப்படுதல் ஆகிய சமுதாயக் கொடுமைகளால் பல ஆசிய பகுதிகளில் ஒவ்வொரு 130 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகளே உள்ளனர் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்த அநீதியான சூழ்நிலையினால், பெண்களை பாலின நடவடிக்கைகளில் அடிமைகளாகப் பயன்படுத்துவது உட்பட, இன்னும் அதிகமான கொடுமைகளுக்கு பெண்கள் உட்படுத்தப்படுவர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நிலவும் பல தவறான கலாச்சாரக் கருத்துக்களை இன்னும் ஆழமாக ஆய்ந்து, இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அவசரமான ஒரு தேவை என்பதை ஐ.நா.வின் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.









All the contents on this site are copyrighted ©.