மேகம், மின்னல், மழை ஆகிய இயற்கைக் கொடைகள் கவிஞர்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் ஆய்வாளர்களுக்கும்
கிடைத்த ஒரு பெரும் கருவூலம். இலக்கியச் சாதனைகளும், அறிவியல் சோதனைகளும் இந்த இயற்கைக்
கொடைகளைச் சுற்றி எழுந்துள்ளன. அமெரிக்காவின் டாலர் நோட்டுக்களில் மட்டுமின்றி, அந்நாட்டின்
வரலாற்றிலும் தனியொரு இடத்தைப் பிடித்துள்ள பெஞ்சமின் பிராங்க்ளின், ஓர் அறிவியல் மேதையாகவும்
இருந்தார். இவர் 1752ம் ஆண்டு, ஜூன் 15ம் தேதி உலகிற்கு ஓர் அற்புத உண்மையை எடுத்துரைத்தார்.
மின்னல் ஒரு மின்சார சக்தி என்பதை பெஞ்சமின் பிராங்க்ளின் அன்று நிறுவினார். மின்னலை
ஒரு தெய்வமாக வழிபட்டு வந்த நம் மூதாதையரின் எண்ணங்களிலிருந்து விலகி, அந்தத் தெய்வம்,
அறிவியல் விளக்கங்களுக்கு உட்பட்ட ஒரு சக்தியென்று பெஞ்சமின் பிராங்க்ளின் உலகிற்கு
விளக்கிய ஜூன் 15ம் தேதி, அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கிய பக்கம். ஒரு சராசரி மின்னலில்
ஏறத்தாழ 30000 ஆம்பியர்கள் மின்சார சக்தி உண்டென்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும்
இந்த உலகில் 6000 இடங்களில் மின்னல்கள் தாக்கிய வண்ணம் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மின்னல்களின் சக்தியை நம்மால் சேமித்து வைக்க முடிந்தால், இவ்வுலகில் அணு உலைகள்,
நீர்வீழ்ச்சிகள் இவைகளில் இருந்து மின்சக்திகளை உருவாக்கும் தேவைகள் நமக்கு இருக்காது.
அணு உலைகளின் ஆபத்தை எதிர் நோக்கும் தேவையும் இருக்காது. இந்த அறிவியல் வெற்றியை நாம்
பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். 'ஒருவருக்கு வாய்ப்பு இருமுறை வருவதில்லை'
என்ற கருத்தை வலியுறுத்த, 'மின்னல் ஒரே இடத்தை இருமுறை தாக்குவதில்லை' என்ற பழமொழியைப்
பயன்படுத்துகின்றனர்.