2011-06-13 15:48:09

திருத்தந்தை: அனைவரையும் அரவணைத்துச் செல்வதே திருச்சபையின் உண்மைப் பண்பு


ஜூன் 13,2011. பெந்தகோஸ்து திருவிழாவான இஞ்ஞாயிறன்று உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருச்சபையை அனைத்து மக்களின் திருச்சபையாக, தூய ஆவியார் எவ்விதம் உருவாக்கினார் என்பது குறித்து மறையுரையாற்றினார்.
திருச்சபை என்பது அனைத்து இனப்பிரிவுகள், வகுப்புப்பிரிவுகள், நாடுகள் என்ற எல்லைகளையெல்லாம் தாண்டி, தன் துவக்கக் காலத்திலிருந்தே அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒன்றாக உள்ளது என்ற திருத்தந்தை, அதுவே அதன் உண்மை பண்பு என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.
'ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்' என்ற விவிலிய வார்த்தைகளை எடுத்துரைத்து, இந்த மகிழ்ச்சி என்பது ஏதோ ஒரு மகிழ்ச்சியில்ல, மாறாக, தூய ஆவியாரின் கொடையான முழு மகிழ்ச்சி என்றார் திருத்தந்தை.
சீடர்களைப் போல் நாமும் இயேசுவை விசுவாசத்தில் காண முடியும், ஏனெனில் அவர் விசுவாசத்தில் நம் முன் வந்து, தன் காயங்களைக் காட்டுகிறார் என்ற பாப்பிறை, நாமும் இறைவனின் பிரசன்னம் எனும் கொடைக்காக வேண்டுவோம், அப்போது மிக உன்னதக் கொடையான மகிழ்ச்சியைப் பெறுவோம் என்று உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.