2011-06-13 15:54:42

இலங்கையில் சிறார் தொழிலாளர்


ஜூன் 13,2011. இலங்கைச் சிறார்களில் 18 விழுக்காட்டினர் குழந்தைத் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாக இது குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு, இலங்கை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் முதன்மை விரிவுரையாளரான எஸ். விஜயச்சந்திரன் அவர்கள், இலங்கையில், குறிப்பாக மலையகப் பகுதியில் பெருந்தோட்டங்களில் 29.1 விழுக்காட்டு சிறார்கள் தொழிலாளர்களாக இருப்பதாகக் கூறினார்.
இலங்கை அரசு சிறார் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும், அவை சக்தியற்று இருப்பதாக விஜயச்சந்திரன் கூறினார். இலங்கையில் சுமார் 30000 சிறார்கள் சுற்றுலாத்துறையில் பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஒப்பீட்டளவில் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கையில் காணப்படும் கட்டாயக் கல்வி முறைமை, மற்றும் அதிக பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றிருத்தல் ஆகியவை இதற்கானக் காரணங்களாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.