2011-06-11 16:52:41

ஐரோப்பாவில் வாழும் நாடோடி இனத்தவரின் பிரதிநிதிகள் 2000 பேருடன் திருத்தந்தையின் சந்திப்பு


ஜூன் 11,2011. ஐரோப்பாவில் வாழும் நாடோடி இனத்தவரின் பிரதிநிதிகளாக உரோம் நகர் வந்திருந்த ஏறத்தாழ 2000 பேரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 'அவர்கள் திருச்சபையின் ஓரங்களில் இல்லை, மாறாக, மையத்தில் உள்ளனர்' என்ற திருத்தந்தை 6ம் பவுலின் வார்த்தைகளுடன் உரை வழங்கினார்.
நாடோடி இனத்தவரைச் சேர்ந்த அருளாளர் Zeffirino Giménez Malla மறைசாட்சியாக உயிரிழந்ததன் 75ம் ஆண்டு தற்போது சிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்த அருளாளரின் பக்தி வாழ்வு ஒவ்வொரு நாடோடி இனத்தவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று கூறினார்.
கடந்த காலங்களில் நாடோடி இனத்தவர் அனுபவித்துள்ள துன்ப துயரங்கள் குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இரண்டாம் உலகப் போரின்போது அவர்களுள் பல ஆயிரக்கணக்கானோர் மரண முகாம்களில் சித்திரவதைப்பட்டு, கொல்லப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
இன்றைய காலத்தில், நாடோடி இனத்தவரின் மாண்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்து, சூழல்கள் நல்லதை நோக்கி மாறிவருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பாப்பிறை.
ஐரோப்பிய நாடோடி இன மக்களுடன் தொடர்ந்து பணியாற்றிவரும் திருச்சபை, அவர்களிடையே நற்செய்தியை அறிவிப்பதற்கான துணிவையும், அர்ப்பணத்தையும் அம்மக்களிடமிருந்தே எதிர்பார்ப்பதாக திருத்தந்தை மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.