2011-06-10 14:40:52

நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் திருத்தந்தை சந்திப்பார்


ஜூன் 10,2011. ‘உரோமா’ என்று அழைக்கப்படும் நாடோடி இனத்தைச் சார்ந்தவர்களின் 1400 பிரதிநிதிகள் இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் உரோமையில் கூடி வருவர் என்றும், இவர்களை இச்சனிக்கிழமை மதியம் திருப்பீடத்தில் திருத்தந்தை சந்திப்பார் என்றும் வத்திக்கான் செய்தி ஒன்று கூறுகிறது.
தூய ஆவியாரின் திருநாள் அன்று திருச்சபை உலகளாவிய வகையில் உருவாக்கப்பட்டது என்பதற்கு இவர்களின் பிரசன்னமும் ஓர் அடையாளம் என்றும், இத்திருநாளையொட்டி நாடோடி இனத்தின் பிரதிநிதிகள் திருத்தந்தையைச் சந்திப்பது மிகவும் பொருத்தமான ஒரு நிகழ்ச்சி என்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிகளின் இயக்குனர் அருள்தந்தை Giancarlo Perego கூறினார்.
பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களைத் தாங்கி வாழும் நாடோடி இனத்தவர் இன்று உலகில் 3 கோடியே 60 இலட்சம் மக்கள் என்றும், இவர்களில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் ஐரோப்பாவில் வாழ்கின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாடோடி மக்களின் விசுவாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய அருளாளர் Zeffirino Gimenez Malla பிறந்து 150 ஆண்டுகளும், அவர் மறைசாட்சியாக இறந்து 75 ஆண்டுகளும் இந்த ஆண்டு நிறைவேறுவதையொட்டி இவ்விரு நாட்களின் கொண்டாட்டங்கள் அமையும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.