2011-06-10 14:32:18

ஜூன் 11. வாழ்ந்தவர் வழியில் ....


அறிஞர் முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர், நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை முஸ்லிம்களை, குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடச்சாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலான அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியவர் இவரே. இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார்.
இலங்கையின் கண்டியில் 1838ம் ஆண்டு ஜூன் 11ம்தேதி பிறந்தார் அறிஞர் சித்திலெப்பை. பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர்.
அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் திறமையாக விளங்கிய இவர், சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.
கண்டி மாநகரச் சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
கல்வியை முன்னிருத்தி சமுதாயத்தை மேம்படச்செய்யும் முயற்சிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டார்.
இஸ்லாமியத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியது.
ஆகவே, தமது பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு, பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். முஸ்லிம் பத்திரிகைத் துறை முன்னோடியான எம். சி. சித்திலெப்பை அவர்கள் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
1898ம் ஆண்டு பெப்ரவரி 5ல் அறிஞர் சித்திலெப்பை காலமானார்.








All the contents on this site are copyrighted ©.