2011-06-10 14:42:38

உலகில் இன்று நூறு கோடிக்கும் அதிகமானோர் எதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் - ஐ.நா. அறிக்கை


ஜூன் 10,2011. உலகில் இன்று நூறு கோடிக்கும் அதிகமானோர் எதோ ஒரு வகையில் குறையுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்று ஐ.நா.வும் உலக வங்கியும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறையுள்ளவர்களை சமுதாயம் புறக்கணிக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கும் கடமை மனித சமுதாயத்திற்கு உள்ளதென்று இவ்விரு நிறுவனங்களும் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளன.
ஐ.நா.வின் உலக நல வாழ்வு நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவைகளைச் சார்ந்த 380 ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அறிக்கையில், மாற்றுத் திறனாளிகளை சமுதாய வாழ்வின் அங்கமாக ஒருங்கிணைப்பதில் ஒவ்வொரு அரசும் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகில் பிறந்த அனைவரும் வாழ்வின் எதோ ஒரு காலக்கட்டத்தில் குறைகளைச் சந்திக்கிறோம் என்றும், இந்தக் குறைகளால் ஒரு சிலர் தற்காலிகமாகவும், வேறு சிலர் நிரந்தரமாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் உலக நல வாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan கூறினார்.
குறையுள்ளவர்களுக்கு சமுதாயம் உருவாக்கும் பல தடைகளே இந்தக் குறைகளை இன்னும் ஆழப்படுத்தும் ஒரு வழியாகிறதென்றும் இத்தடைகளால் மாற்றுத் திறனாளிகளின் குறைகள் இன்னும் ஆழப்படுகிறதேயன்றி குறைக்கப்படுவதில்லை என்று ஐ.நா.வின் மற்றொரு உயர் அதிகாரி Etienne Krug கூறினார்.
உலகின் 150 நாடுகளே மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து சட்டங்கள் இயற்ற ஒப்புதல் தந்துள்ளன என்றும், இவற்றில் 100 நாடுகளே தற்போது இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.