2011-06-09 15:42:32

தெற்கு சூடான் மக்களுக்கு நமது ஒன்றிப்பைப் பல வழிகளிலும் அளிக்க வேண்டும் - வத்திக்கானின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்


ஜூன் 09,2011. இன்னும் சரியாக ஒரு மாதத்தில், ஜூலை 9ம் தேதி, தனிநாடாக பிரிய உள்ள தெற்கு சூடான் மக்களுக்கு நாம் நமது ஒன்றிப்பைப் பல வழிகளிலும் அளிக்க வேண்டும் என்று வத்திக்கானின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
அண்மையில் வத்திக்கான் தொலைக்காட்சியின் 'Octava Dies' என்ற நிகழ்ச்சியில் தெற்கு சூடான் மக்களைக் குறித்து தன் கவலைகளை வெளியிட்டார் இயேசு சபைக் குரு Federico Lombardi.
இருபது ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டுப் போருக்குப் பின், இந்த ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சூடான் நாடு இரு நாடுகளாகப் பிரிய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் அளித்த கருத்தின்படி இந்தப் பிரிவு நிகழ்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Lombardi, இந்தப் பிரிவு நிகழ வேண்டிய நாள் நெருங்கி வருகையில், அந்நாட்டில் நிகழும் வன்முறைகள் நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்று கூறினார்.
பிரிவு நிகழ வேண்டிய எல்லைப் பகுதியில் உள்ள Abyei என்ற நகரில் தொடர்ந்து வரும் வன்முறைகளால் இதுவரை பல ஆயிரம் மக்கள் அந்நகரை விட்டு ஓடிவிட்டனர் என்றும், இவர்கள் பட்டினி, நோய்கள் மற்றும் நெருங்கி வரும் மழைக் காலம் ஆகியவைகளால் அதிகமான பாதிப்புக்களுக்கு உள்ளாவர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சூடானின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாய் வாழ்வது இஸ்லாமியர்கள் என்பதும், தெற்குப் பகுதியில் பெரும்பான்மையாய் வாழ்வது கிறிஸ்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Abyei பகுதியில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை நிறுத்தும்படி ஐ.நா.அவை இப்புதனன்று மீண்டும் அந்நாட்டிற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.