2011-06-09 15:41:42

திருத்தந்தை : அறநெறிகளுடன் இணைந்து செல்லும் தொழில்நுட்பமே மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் உதவுவதாக இருக்க முடியும்


ஜூன் 09,2011. நியூஸிலாந்து, சிரியா, பெலீஸ், ஈக்குயேட்டோரியல் கினி, மொல்தோவியா, கானா ஆகிய நாடுகளின் வத்திக்கானுக்கானப் புதியத் தூதர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை.
இயற்கையிலும், தொழிற்நுட்பத்துறையிலும் மக்களிடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள எண்ணற்ற அழிவுகள் இவ்வாண்டின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட பாப்பிறை, இயற்கை வளங்களின் பொறுப்பாளராக உள்ள மனித குலம் ஒரு நாளும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக மாறிவிடக்கூடாது என்றார்.
இந்த உலகின் வருங்காலம் குறித்தும், தொழில்நுட்பம் மற்றும் வாழ்வு தொடர்புடைய தங்கள் கடமை குறித்தும் நாடுகள் சிந்திக்க இந்த விழிப்புணர்வு உதவ வேண்டும் என்றார் அவர்.
இன்றைய உலகில் சுற்றுச்சூழலை மதித்து, இயற்கையின் பாரம்பரியத்தை பாதுகாத்து, மனித நலனுக்குக் கேடு விளைவிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும், இயற்கையை பயன்படுத்தும் வழிகளுமே அரசியல் மற்றும் பொருளாதார தீர்மானங்களில் முதலிடம் பெறவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பாப்பிறை.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்க வாழ்வை மதிக்காத வாழ்க்கைமுறை, மனித குல அழிவிற்கு இட்டுச்செல்லும் ஆபத்து குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
மனிதனின் படைப்பான தொழில்நுட்பத்தின் இடம் குறித்து மனித குலம் உணர்ந்துச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் தொழில் நுட்பம் ஒன்றே வழி என்ற எண்ணப்போக்கு, மற்றும், மனித கட்டுப்பாட்டையும் மீறிச்செல்லும் தொழில்நுட்பத்தினால் விளையும் அழிவுகள் குறித்தும் கவலையை வெளியிட்டார்.
அறநெறிகளுடன் ஒத்திணங்கிச் செல்லும் தொழில்நுட்பமே மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் உதவுவதாக இருக்கமுடியும் என்பதை பாப்பிறை தன் உரையில் வலியுறுத்தினார்.
திருப்பீடத்திற்கான நியூஸிலாந்து தூதுவர் George Robert Furness Troup, சிரியாவின் தூதுவர் Hussam Edin Aala, பெலீஸ் தூதுவர் Henry Llewellyn Lawrence, ஈக்குயேட்டோரியல் கினி தூதுவர் Narciso Ntugu Abeso Oyana, மொல்தோவியா தூதுவர் Stefan Gorda, கானா தூதுவர் Geneviève Delali Tsegah ஆகியோரை குழுவாகச் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, பின்னர் அவர்களை தனித்தனியாகவும் சந்தித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.