2011-06-08 15:57:37

திருத்தந்தையின் புதன் பொதுமறைப்போதகம்.


ஜூன் 8, 2011. கடந்த சில வாரங்களாக 'கிறிஸ்தவ செபம்' குறித்தத் தொடரை புதன் மறைப்போதகங்களில் வழங்கி வந்த திருத்தந்தை, இவ்வாரம், குரோவேசிய நாட்டிற்கானத் தன் அண்மைத் திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
குரோவேசிய நாட்டிற்கான என் அண்மைத் திருப்பயணத்தில், அந்நாட்டின் கத்தோலிக்கக் குடும்பங்களுக்கான முதல் தேசிய நாளை, Zagreb குதிரைப் பந்தய மைதானத்தில் நிறைவேற்றிய திருப்பலியுடன் சிறப்பித்தேன். இத்திருப்பயணத்திற்கென எடுக்கப்பட்டிருந்த தலைப்பான 'கிறிஸ்துவோடு ஒன்றிணைந்து' என்பது, கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்வதில் குடும்பங்களின் சிறப்புப் பங்கைக் கோடிட்டுக் காட்டுவதாக இருந்தது. குரோவேசியக் கலாச்சாரமானது கத்தோலிக்க விசுவாசத்தால் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, கல்வி மற்றும் சமூக வாழ்வில் குடும்பங்களின் அடிப்படையான இடத்தை வலியுறுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய சிறப்புக் கடமையைக் கொண்டுள்ளது. உண்மையான விடுதலைக்கும் அன்புக்குமான தங்கள் ஏக்கத்தின் நிறைவாக கிறிஸ்துவைக் கண்டு கொள்ளும்படி, குரோவேசியாவின் Jelačić வளாகத்தில் இடம்பெற்ற மாலைத் திருவிழிப்புக் கொண்டாட்டத்தில், இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஞாயிறன்று Zagreb பேராலயத்தில் இடம்பெற்ற ஆராதனை வழிபாட்டின்போது, என் சகோதர ஆயர்கள், குருக்கள், குருமட மாணவர்கள் மற்றும் துறவறத்தாருக்கு ஊக்கமூட்டும் வார்த்தைகளை வழங்கினேன். உலகளாவிய அறநெறி மதிப்பீடுகளில் தன் அடிப்படையைக் கொண்டிருக்கும் ஆழமான குடியாட்சி அமைப்பு முறையின் வளர்ச்சிக்குப் பங்காற்றவல்ல, கிறிஸ்தவத்தில் வேரூன்றியுள்ள மனிதாபிமான நிலைப்பாடு புதுப்பிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை, கலாச்சார உலகினருக்கான என் உரையில் எடுத்துரைத்தேன்.
இத்திருப்பயணத்தில் உதவிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிப்பதோடு, அந்நாட்டையும் அதன் குடும்பங்களையும் குரோவேசியாவின் அரசி அன்னை மரியின் பரிந்துரைக்கென அர்ப்பணிக்கின்றேன்.
இவ்வாறு தன் அண்மை குரோவேசியத் திருப்பயணம் குறித்து தன் கருத்துக்களைத் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.