2011-06-08 16:23:25

ஆப்கானிஸ்தானில் வாழும் இளையோர் கல்வி பெறுவதைக் கனவாகக் கொண்டுள்ளனர் - இயேசுசபை குரு


ஜூன் 08,2011. ஆப்கானிஸ்தானில் உள்ள இளையோர் தங்கள் நாட்டில் நிலவி வரும் நீண்ட காலப் போரைக் கண்டு சோர்வடைந்துள்ளனர் என்றும், அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த வாழ்வையே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் இயேசு சபைக் குரு ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாய் ஆப்கானிஸ்தானில் பணி புரிந்து வரும் அகதிகளுக்கான இயேசு சபைப் பணியாளர்கள் அந்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்து வருகின்றனர்.
12 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளையோர் ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் 68 விழுக்காடு என்றும், உலகிலேயே இளையோர் எண்ணிக்கையில் அதிக விழுக்காடு கொண்டது இந்த நாடே என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வாழும் இளையோர் கல்வி பெறுவதைத் தங்களது கனவாகக் கொண்டுள்ளனர் என்றும், கல்வித்துறையில் பல நாடுகளில் நல்ல பாரம்பரியங்களை இயேசு சபையினர் உருவாக்கியுள்ளதால், இந்த இளையோரின் கனவுகளையும் ஓரளவாகிலும் தங்களால் நிறைவேற்ற முடிகிறதென்றும் இயேசு சபை குரு ஸ்டான் பெர்னாண்டஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள 3 கோடியே, 30 இலட்சம் மக்களில் 10000 மக்களே வன்முறையாளர்கள் என்றும், இவர்களது வன்முறை நடவடிக்கைகளால் இந்த நாடு உலகின் கண்களில் ஒரு வன்முறை நாடாகவே காட்டப்படுவது வேதனைக்குரிய ஒரு விவரம் என்றும் அருள்தந்தை பெர்னாண்டஸ் கூறினார்.
தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த கல்விப் பணியைக் காணும் குழந்தைகளும் இளையோரும் தங்கள் மீது காட்டும் அன்பும் மரியாதையும் பல இன்னல்களுக்கு மத்தியில் இந்தப் பணியைத் தொடர்வதற்கு உந்துதலாக உள்ளதென்று அருள்தந்தை பெர்னாண்டஸ் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.