2011-06-07 14:56:45

பாகிஸ்தானில் விவிலியத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள்


ஜூன் 07, 2011. தெய்வ நிந்தனை, மற்றும் கீழ்த்தரமான பாலின இலக்கியம் ஆகியவற்றைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் தடைச் செய்யப்படவேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டு இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்று வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்.
விவிலியத்தின் சில பகுதிகள் தெய்வ நிந்தனைக்கு உரியதாக உள்ளதாக பாகிஸ்தானின் Jamiat-Ulema-e-Islami என்ற அரசியல் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது கிறிஸ்தவர்களுக்குப் பெரும் மனவேதனையைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட லாகூர் ஆயர் செபஸ்தியான் ஷா, இதனால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளைக் குறைக்க விரும்பும் தலத்திருச்சபை, எவ்விதக் கண்டனக் குரலையும் எழுப்பாமல் மௌனம் காப்பதே சிறந்தது எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் புனித நூலை பாகிஸ்தானில் தடைச்செய்யும் முயற்சி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாகவும், தற்போது தேவைப்படுவது செபமும் பொறுமையுமே என்றும் கூறினார் ஆயர் ஷா.
விவிலியத்தைப் பெரும்பான்மை இஸ்லாமியர்களும் மதிப்பதால் அது தடை செய்யப்படும் வாய்ப்புகள் குறைவே என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.








All the contents on this site are copyrighted ©.