2011-06-07 16:17:49

ஜூன் 08, வாழ்ந்தவர் வழியில்...


ஜூன் 5ம் தேதி, கடந்த ஞாயிறன்று, நமது சுற்றுச்சூழலைக் காப்பதற்கென்று ஐ.நா.அவை உருவாக்கிய உலகச் சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடினோம். ஜூன் 8ம் தேதி உலகப் பெருங்கடல் நாள் (World Ocean Day) கொண்டாடப்படுகிறது. இயற்கைத் தொடர்பான பல நாட்களை நாம் கொண்டாடி மகிழ அதிகக் காரணங்கள் இல்லை. ஆனால், கருத்தில் கொண்டு பயில பாடங்கள் பல உள்ளன.
1992ம் ஆண்டு Brasil நாட்டில் பூமிக்கோளத்தின் உச்சி மாநாடு (Earth Summit 1992) நடந்தபோது, நாம் வாழும் உலகின் பெரும் பகுதியாக இருக்கும் கடல்களையும் நினைவில் கொண்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது. கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதைக் காப்பாற்ற நமக்கு ஓர் எச்சரிக்கை வழங்கும் நாள் இது.
2011ம் ஆண்டுக்கான உலகப் பெருங்கடல் நாளுக்கு ஐ.நா. வழங்கியுள்ள மையக் கருத்து - Youth: the Next Wave for Change - இளமை: மாற்றங்களுக்கான அடுத்த அலை.
இளையோரை ஓர் அலையாக உருவகித்திருப்பது சிறப்பு. அலைகள் ஓயாமல் இயங்கி வரும். காய்ந்தத் தரையை அவை மீண்டும், மீண்டும் ஈரமாக்கும். அதேபோல், இளையோரும் இந்த உலகை, நமது சுற்றுச்சூழலை, நமது கடல்களை, அவற்றில் வாழ் உயிரினங்களைக் காக்க, மனதில் ஈரம் கொண்டவர்களாய், ஓயாது உழைப்பார்கள் என்று நம்புவோம். அவர்களது உலகை இனி அவர்கள்தானே காக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.