2011-06-06 15:35:03

மணிலாவில் புகைப்பிடித்தலை பொது இடங்களில் ஒழிக்க வேண்டும் - ஆயர்கள் வலியுறுத்தல்


ஜூன் 06,2011. பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் புகைப்பிடித்தலை பொது இடங்களில் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் ஆயர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
அண்மையில் மணிலாப் பெருநகரின் அதிகாரிகள் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராக எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்திற்கு இது எச்சரிக்கையாக இருக்கும் என்றும், அதற்குப் பின் பொது இடங்களில் புகைப்பிடிப்போர் தண்டிக்கப்படுவர் என்றும் மாநகராட்சி கூறி வருகிறது.
புகைப்பிடித்தலை பொது இடங்களில் தடை செய்யும் அரசின் இந்த முயற்சியை பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் உயிரியல் நன்னெறி பணிக்குழுவின் தலைவரான ஆயர் Jose Oliveros பெரிதும் வரவேற்றுள்ளார்.
புகைப்பிடிக்கும் பழக்கம் புகைப்பிடிப்போரை மட்டுமல்லாது, அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிப்பதால் இந்தத் தடை கட்டாயம் சமுதாயத்தின் மேல் சுமத்தப்பட வேண்டும் என்று Cubao ஆயர் Honesto Ongtioco கூறினார்.
சிகரெட் மற்றும் மதுபானங்கள் போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரிகளும் சுமத்தப்பட வேண்டும் என்று இவ்விரு ஆயர்களும் கூறியுள்ளனர்.
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்ற எச்சரிக்கை ஒவ்வொரு சிகரெட் பெட்டி அட்டையின் மீதும் பல நாடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர்கள், இந்தப் பாணியை பிலிப்பின்ஸ் நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.