2011-06-06 15:34:47

கோவாவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் கனிமச் சுரங்கத் தொழில்கள் பெரும் ஆபத்தை உண்டாக்கும் தலத்திருச்சபையின் கவலை


ஜூன் 06,2011. கோவா பகுதியில் மேற்கொள்ளப்படும் கனிமச்சுரங்கத் தொழில்கள் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் ஆபத்தை உண்டாக்கும் நிலையில் உள்ளன என்று கோவா தலத்திருச்சபை தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கென அறிக்கையை வெளியிட்டுள்ள கோவா உயர்மறைமாவட்டம் இக்கவலையை வெளியிட்டுள்ளது.
சுரங்கத் தொழில், காடுகளை அழித்தல், சுற்றலாப் பயணங்களை மிக அதிகம் ஊக்குவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள கோவா அரசின் முயற்சிகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலை மிக அதிக அளவில் பாதிக்கும் என்று கோவா உயர்மறைமாவட்ட சமூகநீதி பணிக்குழுவின் இயக்குனர் அருள்தந்தை Maverick Fernandes கூறினார்.
இரும்பு மற்றும் மங்கனீசியம் ஆகிய கனிமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகம் உள்ளதென்ற காரணம் காட்டி, அப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று அருள்தந்தை பெர்னாண்டஸ் விளக்கினார்.
சுற்றுச்சூழல் ஆபத்து நன்னெறிக்கு வந்துள்ள ஓர் ஆபத்து என்று அருளாளர் ஜான் பால் கூறிய வார்த்தைகளை எடுத்துக்காட்டி பேசிய அருள்தந்தை பெர்னாண்டஸ், கோவா அரசு 2011ம் ஆண்டுக்கென உருவாக்கியுள்ள காடுகள் சார்ந்த சட்டங்களை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.