2011-06-06 15:34:31

எய்ட்ஸ் நோய் குறித்து கத்தோலிக்கத் திருச்சபை கூறி வந்த அறிவுரைகளே ஏற்புடையவை


ஜூன் 06,2011. துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களும், பிற மத சார்புடைய நிறுவனங்களும் கத்தோலிக்கத் திருச்சபை எய்ட்ஸ் நோய் குறித்து கூறி வந்த அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் உள்ளன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 5 இஞ்ஞாயிறன்று எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடியும் தருணத்தில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.அமைப்பில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, இது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.
ஐ.நா.வின் கணக்குப் படி, HIV மற்றும் எய்ட்ஸ் நோயால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 2 கோடியே 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆணுறைகளைப் பயன்படுத்துவது எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் என்று பல்வேறு நிறுவனங்கள் கூறி வந்தபோது, தனி மனிதர்களின் சுயக்கட்டுப்பாடே எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வழி என்று கத்தோலிக்கத் திருச்சபை கூறி வந்ததை சுட்டிக் காட்டிய பேராயர் தொமாசி, தற்போது பல்வேறு சமூகப் பணி நிறுவனங்கள் சுயக்கட்டுப்பாடு பற்றி கூறிவருவது நல்லதொரு போக்கு என்று கூறினார்.
இந்த நோயின் முப்பது ஆண்டுகள் நிலையைக் குறித்து அமெரிக்கப் பொது நலத்துறை நிபுணர் Matthew Hanley என்பவர் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கத்தோலிக்கத் திருச்சபை இது நாள் வரை கூறிவந்த சுயக்கட்டுப்பாடே இந்த நோயை கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.